லண்டன்: இணையத்தில் ஆபத்தான தகவல்களைப் பிள்ளைகள் பார்க்காமல் இருக்க பிரிட்டன் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 25) முதல் பிரிட்டனில் வயது வரம்பு சரிபார்ப்பு அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்குத் தேவையில்லாத அல்லது ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படும் தகவல்கள் கொண்டுள்ள இணையத்தளங்கள், செயலிகள், முக அடையாளம், கடன்பற்று அட்டை சமர்ப்பிப்பது உள்ளிட்ட வயது வரம்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
இந்த நடைமுறைக்கு ஆபாசக் காணொளிகளை வைத்துள்ள கிட்டத்தட்ட 6,000 இணையத்தளங்கள் ஒப்புக்கொண்டதாகப் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
எக்ஸ் (டுவிட்டர்) தளமும் புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளது. வன்முறை, வெறுப்புப் பேச்சு உள்ளிட்டவற்றையும் பிள்ளைகள் காணாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்களுக்குக் கிட்டத்தட்ட 31 மில்லியன் வெள்ளி அல்லது உலக அளவில் கிடைக்கும் 10 விழுக்காடு வருமானத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறும் ஊழியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கையைப் பிரிட்டனில் உள்ள பல அமைப்புகள் வரவேற்றுள்ளன. இது பெரிய சாதனை என்றும் அவை வர்ணித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பிள்ளைகளுக்குத் தேவையில்லாத தகவல்களைக் கொண்டு சேர்க்கக்கூடாது என்பதற்காகக் கடுமையான இணையத்தள நடைமுறை வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி இது என்றும் அமைப்புகள் கூறின.
கடந்த மாதம், எட்டு முதல் 14 வயதுள்ள பிள்ளைகளில் கிட்டத்தட்ட 500,000 பிள்ளைகள் இணையத்தில் ஆபாசக் காணொளிகளைப் பார்த்ததாக ஆப்காம் (Ofcom) அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நடைமுறை கட்டாயம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அது குறிப்பிட்டது.