இரண்டாம் முறை ‘மில்லியன் ஜாக்பாட்’ வென்ற பிரிட்டன் தம்பதி

1 mins read
cc9eee1d-8152-446d-9891-efe579938457
மகிழ்ச்சி வெள்ளத்தில் திரு ரிச்சர்ட் டேவிஸ், அவரது மனைவி ஃபெயி ஸ்டீவன்சன். - படம்: THE NATIONAL LOTTERY/X

ஒரு பிரிட்டன் தம்பதி, அரிதினும் அரிதாக இரண்டாம் முறையாக ‘லோட்டோ’ என அழைக்கப்படும் ‘ஜாக்பாட் லாட்டரி’ போட்டியில் S$1.7 மில்லியன் வென்றுள்ளனர்.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடந்த அந்த லாட்டரி போட்டியில் அவர்கள் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டு, உலகெங்கும் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.

திரு ரிச்சர்ட் டேவிஸ், அவரது மனைவி ஃபெயி ஸ்டீவன்சன் தம்பதி, கடைசியாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த போட்டியில் இதேபோன்று S$1.7 மில்லியன் (£1 million) வென்றுள்ளனர்.

“எங்களுக்கு மீண்டும் பரிசு கிடைக்கும் நம்பமுடியாதது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நம்பிக்கை வைத்தால் எதுவும் நடக்கும் என்பதை இச்சம்பவம் உண்மையாக்கிவிட்டது,” என்று திருமதி ஸ்டீவன்சன் மகிழ்ச்சியில் கூறினார்.

இந்த நம்பமுடியாத அதிர்ஷ்டம் இருவரது வாழ்க்கை முறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

பிரிட்டனின் அங்கமான வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதி, சமூக சேவையில் தொண்டாற்றும் பண்புள்ளவர்கள் ஆவர்.

சிகை அலங்காரத் துறையில் பணியாற்றிய திரு டேவிஸ், தற்போது கார்டிவ் நகரில் விநியோக ஓட்டுநராக உள்ளார். வீடுகளின்றி சமூக இல்லங்களில் வசிப்போருக்கு சேவையாற்றுகிறார்.

அவரது மனைவி, ஆலோசனை சேவை நிறுவனத்தை நடத்துகிறார். உள்ளூர் அமைப்புகளுக்கு சுகாதார வழிகாட்டுதலையும் மனநல உதவியும் வழங்கி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்