லண்டன்: தமது வருடாந்தர ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தியில் போர், மனித இனம் அனுபவித்துவரும் துன்பங்கள், மற்றவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இன்னுயிர் நீத்த வீரர்கள் ஆகியோரைப் பற்றி பிரிட்டன் மன்னர் சார்லஸ் பேசினார்.
வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 17) அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நாம் விடை தெரியாமல் தவித்துவரும் புதிர்களில் ஒன்று, மனிதர்களால் எப்படி மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் மிக மோசமான கொடூரச் செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்க முடிகிறது என்பதுதான் என்றார்.
அவற்றை மனித வாழ்க்கையின் முரண்பாடுகள் என அவர் வர்ணித்தார்.
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மனிதநேய உதவிகள் செய்துவரும் மனிதர்கள் ஒருபுறம் இருக்க, மறுபக்கம் மற்றவர்களுக்குத் துன்பத்தை விளைவிக்கும் கூட்டத்தையும் காண முடிகிறது என மன்னர் சார்லஸ் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.