வரி செலுத்துவதைத் தவிர்க்க அமெரிக்கர்களுக்கு உதவிய குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள பிரிட்டிஷ் ஆடவர் ஒருவர் இணங்கியிருக்கிறார். ‘சிங்கப்பூர் தீர்வு’ எனும் மோசடித் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு உதவியதாக ரோட்ரிக் சேஜ் எனும் அந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
பிரிட்டனிலிருந்து அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சேஜ் அடுத்த வாரம் மன்ஹேட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளார். அமெரிக்க நீதித் துறையுடன் அவர் ஒப்பந்தம் ஒன்றை எட்டியதாகத் தெரிகிறது. அதன்படி, அவருக்கு ஈராண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.
2020ஆம் ஆண்டு சேஜ்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சுவிட்சர்லாந்தின் நிதி நிறுவனமொன்றுடனும் ஐந்து நிர்வாகிகளுடனும் சேர்ந்து வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அமெரிக்கர்கள் சிலர் வெளிநாடுகளில் ரகசியமாக வைத்திருந்த 60 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வரி செலுத்தாமல் இருக்க அனைவரும் உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. டேனியல் வால்ச்லி, ரோல்ஃப் ஷ்னெல்மேன் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அமெரிக்காவில் வரி செலுத்துபவரான வெய்ன் ஃபிராங்க்ளின் சின் என்பவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சேஜ், ஹாங்காங் நிறுவனமொன்றின் நிறுவனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். அந்நிறுவனம் போலி வங்கிக் கணக்குகளை உருவாக்கியது. சுவிட்சர்லாந்தின் பிரைவேட்பேங்க் ஐஎச்ஏஜி எனும் தனியார் வங்கியிலிருந்து பணத்தைப் பெற அந்தப் போலி வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

