எவரெஸ்ட் சிகரத்தில் 20வது முறையாக ஏறி கென்டன் கூல் புதிய சாதனை

எவரெஸ்ட் சிகரத்தில் 20வது முறையாக ஏறி கென்டன் கூல் புதிய சாதனை

2 mins read
7675af1c-ccc3-472e-87d8-06d8d7975412
52 வயதான கென்டன் கூல், மே 22ஆம் தேதி விடியலுக்கு முன்பே 8,849 மீட்டர் (29,032 அடி) உயரமுள்ள சிகரத்தின் உச்சியை அடைந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: ஒரு பிரிட்டிஷ் மலையேறி வெள்ளிக்கிழமையன்று (மே 22) தனது முந்தைய எவரெஸ்ட் சாதனையை முறியடித்து, உலகின் மிக உயரமான மலையில் தனது 20வது முறையாக ஏறியதாக மலையேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

52 வயதான கென்டன் கூல், விடியலுக்கு முன்பே 8,849 மீட்டர் (29,032 அடி) உயரமுள்ள சிகரத்தின் உச்சியை அடைந்த பிறகு, மலையடிவாரத்தில் உள்ள முகாம்களை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார் என்று பயணத்தை ஏற்பாடு செய்யும் நிறுவனமான ஹிமாலயன் கைட்ஸின் இஷ்வரி பௌடெல் கூறினார்.

“கூல் அமைதியாகச் சாதனைப் புத்தகங்களை மீண்டும் எழுதுகிறார்,” என்று ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஃபர்டன்பாக் அட்வென்ச்சர்ஸ் நிறுவனத்தின், நான்கு முறை எவரெஸ்ட் ஏறியவரும் பயண ஏற்பாட்டாளருமான லூகாஸ் ஃபர்டன்பாக் கூறினார்.

2004ல் முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய கூல், பல்வேறு காரணங்களுக்காக அதிகாரிகள் மலையை மூடிய சில ஆண்டுகளைத் தவிர, அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சாதனையை மீண்டும் செய்து வருகிறார். எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை எட்டுவது ஒரு வழக்கமான செயல் அல்ல என்று அவர் கூறினார்.

“இது ஒருபோதும் எளிதாகவோ அல்லது அச்சம் குறைந்ததாகவோ இருப்பதில்லை. இது உலகின் மிக உயரமான மலை. அதில் ஏறும்போது ஒருவித கம்பீர உணர்வும் வருகிறது,” என்று கூல் ஓர் அறிக்கையில் கூறினார்.

“இந்தச் சூழலில் பாதுகாப்பாகச் செயல்பட, என்னிடம் உள்ள ஒவ்வொரு துளி அனுபவத்தையும் நான் நம்பியிருக்கிறேன். இருபதாவது முறையாக சிகரத்தில் நிற்பது நம்பமுடியாத அளவிற்குச் சிறப்பானது,” என்றார் கூல்.

எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறியதற்கான சாதனையை, நேப்பாள ஷெர்பாவான காமி ரீட்டா 32 முறை ஏறிப் படைத்துள்ளார்.

1953ல் நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹில்லரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோரால் முதன்முதலில் ஏறப்பட்டதிலிருந்து, 8,000க்கும் மேற்பட்டோர் எவரெஸ்டில் ஏறியுள்ளனர். அவர்களில் பலர் பலமுறை ஏறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்