பிரிட்டிஷ் அரச தம்பதியர் அமெரிக்காவிற்கு 4 நாள் பயணம்

பிரிட்டிஷ் அரச தம்பதியர் அமெரிக்காவிற்கு 4 நாள் பயணம்

படம்: ராய்ட்டர்ஸ்

27 Apr 2026 - 6:19 pm

2 mins read

வாஷிங்டன்: பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணத்தைத் தொடங்குகிறார். அமெரிக்கா, ஈரான் இடையே போர்ப் பதற்றம் தொடரும் சூழலிலும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்த நிலையிலும் அவரின் பயணம் இடம்பெறுகிறது.

அமெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரிட்டன், அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவைக் கௌரவிக்கும் விதமாக மன்னர் சார்ல்ஸ்-அரசியார் கமிலா தம்பதியரின் நான்கு நாள் பயணம் அமைவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காலஞ்சென்ற அரசியார் இரண்டாம் எலிசபெத், 1991ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய பிறகு, அங்கு உரையாற்றும் முதல் பிரிட்டிஷ் மன்னர் என்ற பெருமையை மன்னர் சார்ல்ஸ் பெறுவார். அத்துடன், திரு டிரம்ப்புடனும் அவரின் மனைவி மிலெனியாவுடனும் தேநீர் விருந்திலும் அரசாங்க இரவு விருந்திலும் அரச தம்பதியர் பங்கேற்பர்.

புதன்கிழமை நியூயார்க் நகருக்குச் செல்லும் அரச தம்பதியர், செப்டம்பர் 11 நினைவிடத்தைப் பார்வையிடுவார். அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அவர்கள் பெர்முடா தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்வர்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகைச் செய்தியாளர் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதிலும் அரச தம்பதியரின் அமெரிக்கப் பயணம் திட்டமிட்டபடி இடம்பெறும் என்று பக்கிங்ஹம் அரண்மனை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

திரு டிரம்ப், அவரின் மனைவி, இதர விருந்தினர்கள் காயமின்றி உயிர் தப்பியதைக் கேள்விப்பட்டு மன்னர் சார்ல்ஸ் நிம்மதி அடைந்ததாக அரண்மனை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
மன்னர்அமெரிக்காடோனல்ட் டிரம்ப்