பெட்டாலிங் ஜெயா: தம் தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி அண்ணனும் தங்கையும் உயிரிழந்த சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்தது.
அமிருல் ஹஸ்லின், 18. என்ற ஆடவர் தம் ஐந்து வயதுச் சகோதரி நூர் அஃபிக்கா சோஃபியாவுடன் சென்ற மோட்டார்சைக்கிள், சாலை ஓரமாக இருந்த குப்பைத்தொட்டிமீது மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்து திங்கட்கிழமை (செப்டம்பர் 23) மாலை 6.15 மணியளவில் நேர்ந்ததாக சினார் ஹரியான் செய்தி தெரிவித்தது.
அவர்களைப் பின்தொடர்ந்து இன்னொரு மோட்டார்சைக்கிளில் அவர்களின் தாயார் நோரிஸான் உஜாக், 40, தம் பிள்ளைகள் விபத்தில் சிக்கியதை நேரில் கண்டார்.
ஆயர் கெரோவிலிரிந்து சுங்கை உடாங்கிற்கு அவர்கள் சென்றுகொண்டிருந்ததாக மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிறிஸ்டஃபர் பட்டிட் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய உடன்பிறப்புகள் இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அவ்விருவரும் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆயினும், இரவு 7.40 மணியளவில் அண்ணனும் நள்ளிரவு 12.30 மணியளவில் தங்கையும் இறந்துவிட்டதாக ஓர் அறிக்கை மூலம் திரு கிறிஸ்டஃபர் தெரிவித்தார்.
குப்பைத்தொட்டியின் உரிமையாளரையும் மற்ற சாட்சிகளையும் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

