ஸ்டிராஸ்பர்க்: பிரான்சின் கிழக்குப் பகுதியில் உள்ள ‘ஸ்டிராஸ்பர்க்’ நகரில் இரண்டு டிராம்கள் சுரங்கப்பாதையில் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘ஸ்டிராஸ்பர்க்’ நகரின் முக்கிய ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்து நேர்ந்தது. பாரிசுக்கு வெளியே, பிரான்சின் மிகப் பரபரப்பான இடங்களில் ஒன்று அது.
விபத்தில் கிட்டத்தட்ட 36 பேர் காயமடைந்ததாக போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபாரொட் கூறினார். இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் அந்த எண்ணிக்கை 50ஆக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், நிலையத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதையில் இரண்டு டிராம்கள் சேதமுற்றதையும் அவற்றில் ஒன்று தடம்புரண்டோடியதையும் காணமுடிந்தது.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் இதன் தொடர்பில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நிலையத்துக்கு முன்னால் பெரிய பாதுகாப்பு வேலி போடப்பட்டுள்ளதாகவும் அவசர மருத்துவ வாகனங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் சம்பவ இடத்தில் இருந்த ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கூறினார்.
மருத்துவ உதவியாளர்களும் தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தோரைத் தூக்குப்படுக்கைகளில் ஏற்றி மருத்துவ வாகனங்களுக்குள் செலுத்திக்கொண்டிருந்தனர். காயமடைந்த மற்றவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.
கடந்த 1994ஆம் ஆண்டில் மீண்டும் டிராம்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய முதல் முக்கிய பிரஞ்சு நகரம், ‘ஸ்டிராஸ்பர்க்’. முன்னதாக 1960ஆம் ஆண்டில் அந்தச் சேவை நிறுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
டிராம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியதிலிருந்து அங்குப் பெரிய அளவில் விபத்துகள் நேர்ந்ததில்லை.

