நியூயார்க்: அமெரிக்காவின் சுகாதார அமைப்பான யுனைடெட்ஹெல்த் குழுமத்தின் (UnitedHealth Group) தலைமை நிர்வாக அதிகாரி பிரயன் தாம்சனைக் கொன்றதாக நம்பப்படும் ஆடவர், தனக்காக வாதிட முன்னாள் நியூயார்க் அரசுத் தரப்பு வழக்கறிஞரை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபரான லுயீஜி மன்கியோனெ, முன்னாள் நியூயார்க் அரசு தரப்பு வழக்கறிஞர் கேரன் ஃபிரீட்மன் அக்னிஃபிலோவை நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருவாட்டி ஃபிரீட்மன் அக்னிஃபிலோவை, மன்கியோனெயின் குடும்பத்தார் அண்மையில் தொடர்புகொண்டனர். இத்தகவலை வெளியிட்டவர் தனது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் மேன்ஹேட்டன் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே இம்மாதம் நான்காம் தேதியன்று திரு பிரயன் தாம்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐந்து நாள்கள் நீடித்த தேடல் வேட்டைக்குப் பிறகு மன்கியோனெ, பென்சில்வேனியா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
நியூயார்க் அதிகாரிகள், 26 வயது மன்கியோனெ மீது வலுவான ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் காணப்பட்ட தோட்டா உறைகளுக்கும் (shell-casings) மன்கியோனெ கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த துப்பாக்கிக்கும் தொடர்பிருக்கக்கூடும் என்ற விவரம் அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதத்தில் அடங்கும்.
திருவாட்டி ஃபிரீட்மன் அக்னிஃபிலோ, பல ஆண்டுகளாக நியூயார்க் குற்றவியல் சட்டத் துறையில் பணியாற்றியிருக்கிறார்.

