பிரயன் தாம்சன் கொலை: சந்தேக நபர் காப்புறுதித் திட்ட வாடிக்கையாளர் அல்லர்

1 mins read
e7545ab2-a548-4df1-93cf-66b9e2af93f9
லுய்கி மென்கியோன் டிசம்பர் 9ஆம் தேதி பென்சில்வேனியாவில் கைது செய்யப்பட்டார். - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரயன் தாம்சனின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் காப்புறுதித் திட்ட வாடிக்கையாளர் அல்லர் என்று நிறுவனப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

லுய்கி மென்கியோனும் அவரது தாயாரும் யுனைடெட் ஹெல்த் உறுப்பினர்கள் அல்ல என்று நிறுவனம் கூறியது.

நாட்டின் ஆகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தால் அவர் சினமடைந்து அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் கருத்தை அது மறுத்தது.

மென்கியோன் டிசம்பர் 9ஆம் தேதி பென்சில்வேனியாவில் கைது செய்யப்பட்டார். நியூயார்க்கிற்கு அனுப்பப்படுவதற்கு எதிராக அவர் போராடி வருகிறார். அங்குதான் அவர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், துப்பாக்கிக்காரர் தனக்கு மறுக்கப்பட்ட மருத்துவக் கோரிக்கையாலோ மற்ற காப்புறுதிப் பிரச்சினைகளாலோ வருத்தப்பட்டு அதனை நடத்தினாரா என்று பலர் ஊகித்தனர்.

முன்னதாக, மென்கியோனுக்கு முதுகு வலி இருந்ததை இணையப் பதிவுகள் காட்டின. அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் அதன் மூலம் தெரியவந்தது. அவருக்கு இருந்த மருத்துவப் பிரச்சினைகள், அவரை வன்செயலுக்கு இட்டுச்சென்றிருக்கக்கூடுமா என்ற கேள்வி எழுந்தது.

இருப்பினும், அவரது கோபத்திற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. யுனைடெட் ஹெல்த் தொடர்ந்து சட்ட அமலாக்கப் பிரிவுடன் செயல்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் கூறினார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்