ஜகார்த்தா: இந்தோனீசியா, அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் முக்கியத் திட்டமான இலவசப் பள்ளி உணவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 268 டிரில்லியன் ரூப்பியாவிலிருந்து 229 டிரில்லியன் ரூப்பியாவாக ($16.52 பில்லியன்) மேலும் குறைத்துள்ளது என்றும் கூடுதல் நிதி வெட்டுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இத்திட்டத்தை நிர்வகிக்கும் மூத்த அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) தெரிவித்தனர்.
இத்திட்டம், பிரபோவோவின் மிக முக்கியமான மற்றும் அதிக செலவுமிக்க தேர்தல் பிரசார வாக்குறுதியாகும். மேலும், இந்தோனீசியாவின் நிதி நிலைமை குறித்த பரவலான கவலைகளுக்கு இது மையமாக இருந்து வருகிறது.
முதலில், 2026ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 335 டிரில்லியன் ரூப்பியா ஒதுக்கப்பட்டது. இதன் இலக்கு, மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அடங்கிய 83 மில்லியன் பயனாளிகளை, அதாவது, மக்கள் தொகையில் ஏறக்குறைய 30 விழுக்காட்டினரை இந்த ஆண்டின் இறுதிக்குள் சென்றடைவதாகும்.
ஆனால், செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் அந்த நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடத்தும் தேசிய ஊட்டச்சத்து அமைப்பு, பயனாளிகள் மற்றும் சமையலறையை நடத்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் ($2.6 பில்லியன்) அதிகமான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம், ஜூன் மாதம் செய்தி வெளியிட்டது.
உள் ஆய்வைத் தொடர்ந்து இறுதி நிதி ஒதுக்கீட்டுத் தொகையைத் தெரிவிக்க அந்த அமைப்புக்குப் பிரபோவோ ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ளார் என்று அதன் செயலாளர் லில்லி கமிலியா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், குறிப்பிடப்பட்ட 229 டிரில்லியன் ரூப்பியா என்பது ஒரு தற்காலிகத் தொகை என்றும் செயல்திறன் நடவடிக்கைகளுக்கு மேலும் இடமுள்ளது என்றும் அவர் கூறினார்.
“பயனாளிகளின் எண்ணிக்கையில் குறைப்பு இருக்கும். அதிபர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை இலக்காகக் கொள்ளவில்லை. மாறாக, உணவு நஞ்சாதல் மீண்டும் ஏற்படாத வகையில் தரத்தில் முன்னேற்றம் காண விரும்புகிறார்,” என்று தேசிய ஊட்டச்சத்து அமைப்பின் துணைத் தலைவர் அகஸ்டினா அரும்சாரி கூறினார்.
இந்த ஆய்வுக்கு முன்பு, 62.5 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

