வரவுசெலவுத் திட்டத்தில் US$163பி. நிதியைக் குறைக்க பரிந்துரை: அதிபர் டிரம்ப்

2 mins read
76d39551-1a27-445a-b77f-fa7680c999b5
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கல்வி, வீடமைப்பு, மருத்துவ ஆய்வு ஆகியவற்றுக்கான செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் பரிந்துரையை முன்வைக்கத் திட்டமிடுகிறார். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் வரவுசெலவுத் திட்டத்திலிருந்து 163 பில்லியன் டாலர் நிதியைக் குறைக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் சனிக்கிழமை (மே 3) பரிந்துரைத்துள்ளது.

அதன் மூலம் 2026ஆம் ஆண்டுக்கான கல்வி, வீடமைப்பு, மருத்துவ ஆய்வு ஆகியவற்றுக்கான செலவுகள் கணிசமாகக் குறைவதோடு தற்காப்பு, எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றுக்கான செலவினம் அதிகரிக்கும்.

திரு டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த உத்தேசப் பரிந்துரை உள்நாட்டுப் பாதுகாப்புக்கான நிதியைக் கிட்டத்தட்ட 65 விழுக்காடு அதிகரிக்கும்.

சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பராமரிப்புத் திட்டங்கள், தேசிய கடன்மீது அதிகரிக்கும் வட்டிக் கட்டணங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து தற்காப்பு அல்லாத முக்கிய செலவினத்தை 23 விழுக்காடு வரை குறைக்க வெள்ளை மாளிகையின் நிர்வாக, வரவுசெலவு அலுவலகம் முற்படுகிறது.

அதிபர் பதவிக்கு வந்த பிறகு எதிர்கொள்ளும் முதல் வரவுசெலவுத் திட்டத்தில் திரு டிரம்ப் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகச் சொன்ன தமது வாக்குறுதியை நிறைவேற்ற முயல்கிறார்.

இருப்பினும் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நாட்டுச் செலவினங்களைப் பெரியளவில் குறைப்பது கடுமையான நடவடிக்கை என்று சாடினர். குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தற்காப்பு போன்ற இதர அம்சங்களில் செலவினத்தை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

மத்திய அரசாங்கம் 36 டிரில்லியன் டாலர் கடனை எதிர்கொள்கிறது. 2017ஆம் ஆண்டின் வரிக் குறைப்பைத் திரு டிரம்ப் நீட்டிப்பதன் மூலம் அந்தக் கடன் இன்னும் கூடும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இதற்கிடையே, அதிபர் டிரம்ப் மாற்றத்தின் காலகட்டத்தை அமெரிக்கா கடந்துசெல்கிறது என்றும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

“நாம் மாற்றத்தின் காலகட்டத்தில் இருக்கிறோம். அதில் இப்போதுதான் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூகத் தளத்தில் பதிவிட்டார்.

அதிபராக 100 நாள்களை அண்மையில் கடந்த திரு டிரம்ப், பொருளியல் விவகாரங்களைக் கையாளும் விதம் குறித்து பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காவரவுசெலவுத் திட்டம்நிதி