தரைமட்டமான கட்டடம்; உயிர் தப்பிய அதிசய குழந்தை

தரைமட்டமான கட்டடம்; உயிர் தப்பிய அதிசய குழந்தை

2 mins read
8fd07e4e-7b34-492d-b6f8-2c73edbe1d7d
காயமின்றித் தப்பியதாகக் கூறப்படும் கைக்குழந்தை முதலில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்படுவதையும், அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அக்குழந்தையின் தாய் மீட்கப்படுவதையும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்டுகிறது. - படங்கள்: ஏஎஃப்பி (AFP)

லா குவைரா: வெனிசுவெலாவின் கடலோர நகரத்தை உருக்குலைத்த இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்துவிழுந்த கட்டடத்திலிருந்து, ஒன்றரை நாள்களுக்குப் பிறகு கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தலைநகர் காரகாஸுக்கு வடக்கே கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமான லா குவைராவில், இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் படையினர் பணியாற்றுவதையும், கைதட்டல்களுக்கு மத்தியில் அந்தக் குழந்தையை அவர்கள் வெளியே கொண்டுவருவதையும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்டுகிறது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 26) இரவில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

போர்வையால் சுற்றப்பட்ட அந்தக் குழந்தையை அவர்கள் கவனமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுவதையும், பின்னர் ‘டிஸ்யூ’ தாள்களால் குழந்தையை மென்மையாகத் தூய்மைப்படுத்துவதையும் அந்தக் காணொளி காட்டுகிறது. 

18 நாள்களே ஆன அந்தக் குழந்தை இடிபாடுகளில் சிக்கியிருந்தும், அதற்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று சமூக ஊடகங்களில் அந்தக் காணொளியை வெளியிட்ட ஆண்ட்ரீனா குயின்டெரோ (Andreina Quintero) குறிப்பிட்டார். 

குழந்தை மீட்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, குழந்தையின் தாயாரும் மீட்கப்பட்டார்.

அதே நாளில் வெளியான மற்றொரு காணொளியில், அந்தத் தாய் மருத்துவமனைப் படுக்கையில் இருப்பதையும், குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று மருத்துவ ஊழியர் ஒருவர் அவரிடம் கூறுவதும் பதிவாகியிருந்தது.

கட்டடம் இடிந்துவிழுந்த நேரத்தில், தாயார் தமது உடலாலோ வேறு ஏதாவது பொருளாலோ குழந்தையை மூடிக் காப்பாற்றியிருக்கலாம் என்று அந்த மருத்துவர் கூறுகிறார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வெனிசுவெலாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இடிந்துவிழுந்த கட்டடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாள்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 1,430ஐ எட்டியுள்ளதால், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கையும் குறைந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
நிலநடுக்கம்குழந்தைகட்டடம்காயம்