ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகர மன்றம், கட்டடங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யவிருக்கிறது. வார இறுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த நகர மன்றம் முனைந்துள்ளது.
ஜோகூர் பாரு மேயர் ஹஃபிஸ் அகமது, எதிர்பாராதவிதமாக நில அதிர்வுகள் உண்டானால் சேதத்தைக் குறைக்க நகரில் உள்ள அனைத்துக் கட்டடங்களும் வலுவாக இருக்கின்றதா என்பதை உறுதிசெய்வது முக்கியம் என்றார். அதனால் மறுஆய்வை மேற்கொள்ளுமாறு நகர மன்றத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் சொன்னார்.
பத்து பகாட்டுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) 3.5 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலைத் துறை தெரிவித்தது. ஆகஸ்ட் இறுதியிலிருந்தே சிறுசிறு நிலநடுக்கங்கள் ஜோகூரை உலுக்கி வருகின்றன.
பொதுப் பணி, தீயணைப்பு மற்றும் மீட்பு, வானிலை, கனிமவள மற்றும் நில அறிவியல் துறைகளுடன் இணைந்து கட்டடங்களின் பாதுகாப்பை நகர மன்றம் மறு ஆய்வு செய்யும். மறு ஆய்வில் உயர்கல்வி நிலையங்களின் வல்லுநர்களும் ஈடுபடுத்தப்படுவர். பெரிய கட்டடங்களோடு பொது நிலையங்கள், வர்த்தக நடுவங்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்பு வட்டாரங்கள் முதலியவற்றின் பாதுகாப்பும் மறுமதிப்பீடு செய்யப்படும்.
தற்போதைய கட்டடங்களுக்கும் புதிய திட்டங்களுக்கும் வலுவான தொழில்நுட்ப வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்குவதே நம் இலக்கு என்றார் மேயர் ஹஃபிஸ்.