கோலாலம்பூர்: மலேசியாவில் இணையம்வழி இடம்பெறும் குற்றங்கள் கவலைதரும் அளவுக்கு அதிகரித்துள்ளன.
சென்ற ஆண்டு 66,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்தைய ஆண்டு பதிவான 35,000 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், அது கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகம்.
கடந்த ஆண்டு பதிவான மொத்த இழப்பு ஏறக்குறைய 3 பில்லியன் ரிங்கிட்டுக்குக் கூடியதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்ற விசாரணைத் துறையின் இயக்குநர் ருஸ்டி முகமது ஈசா கூறினார். அது, பொருளியலுக்கும் சமூக நிலைத்தன்மைக்கும் கடும் மிரட்டல் என்றார் அவர்.
குற்றச் சூழலில் ஒரு முக்கிய மாற்றம் தெரிவதாகவும் அவர் கூறினார். தற்போது விசாரிக்கப்படும் 90 விழுக்காட்டு வர்த்தகக் குற்றச் சம்பவங்கள் இணையத்தில் நடப்பதாக அவர் சொன்னார்.
“ஐந்தாண்டுகளுக்கு முன்னர், இழப்பு 700 மில்லியன் ரிங்கிட் ஆக இருந்தது. இப்போது அது மூன்று பில்லியன் ரிங்கிட்டை நெருங்குகிறது. குற்றவாளிகள் இப்போது தொழில்நுட்ப வசதிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்,” என்று திரு ருஸ்டி கூறினார்.
அவர் பெர்னாமா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இல்லாத முதலீட்டுத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட இணையக் குற்றங்கள் நிதி இழப்புக்கு ஆகப் பெரிய காரணம் என்றார் அவர். அதனால் ஏற்பட்ட இழப்பின் தொகை 1.5 பில்லியன் ரிங்கிட்.
இதற்கிடையே, திரு ருஸ்டி 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை மூன்றாம் தரப்பினர் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றார் அவர்.
“எளிதில் பணம் வேண்டும் என்பதால் உங்கள் எதிர்காலத்தை வீணாக்காதீர்கள். அது, உங்கள் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும். நிதி நிறுவனங்கள் உங்களுக்குத் தடை விதிக்கக்கூடும்,” என்று திரு ருஸ்டி கூறினார்.

