புக்கிட் காயூ ஹித்தாம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டுப் பிரிவின் புக்கிட் காயூ ஹித்தாம் தளபதி, முகம்மது நசருதீன் முகம்மது நசீர் பயணம் செய்த வாகனத்தின்மீது, புதன்கிழமை (பிப்ரவரி 25) அதிகாலை மலேசியா-தாய்லாந்து எல்லை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அதிகாலை 5.40 மணியளவில், எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்தது எ திரு முகம்மது நசருதீன் காயமின்றி உயிர் தப்பினார் என்றும் கெடா மாநிலக் காவல்துறைத் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
மஸ்ஜித் அல் முஹாஜிரின் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக திரு முகம்மது நசருதீன் சென்று கொண்டிருந்தபோது, கறுப்பு நிற உடை அணிந்து, முழுவதுமாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை நெருங்கியுள்ளனர்.
“சந்தேக நபர்களில் ஒருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காரின் பின்வலது பக்க கதவு மற்றும் பயணிக்கான முன் இருக்கைக் கதவு பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்தன. அதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்பட்டவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை,” என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, தனியாக காரை ஓட்டிச் சென்ற திரு முகம்மது நசருதீன், தப்பியோடிய சந்தேக நபர்களைக் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றுள்ளார். பின்னர், அவர்கள் அருகில் உள்ள தொழிற்பேட்டை பகுதிக்குள் நுழைந்து மறைந்துவிட்டனர்.
“அதன்பின்னர், அவர் தனது காரை குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்று புகார் அளித்தார்,” என்று திரு அட்ஸ்லி கூறினார்.

