சோஃபியா: நாட்டு மக்கள் பல வாரங்களாக ஊழலுக்கும் பொருளாதார கொள்கைகளுக்கும் எதிராக வீதிகளில் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு பல்கேரிய அரசாங்கம் வியாழக்கிழமை (டிசம்பர் 11) பதவி விலகியுள்ளது.
பல்கேரிய நாடாளுமன்றம் நம்பிகை இல்லாத் தீர்மானத்தை முன்வைப்பதற்கு முன்னதாக, பிரதமர் ரோசன் செல்யாஸ்கொஸ், அவரது அரசாங்கம் பதவி விலகுவதாக தொலைக்காட்சியில் அறிக்கை வெளியிட்டார்.
வரவிருக்கும் 2026 ஜனவரி 1ல் ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பல்கேரியா இணையவிருக்கும் வேளையில் இது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் கூட்டணிகள் சந்தித்துக்கொண்டன. நாடு எதிர்நோக்கும் சவால்களை கருத்தில்கொண்டு பொறுப்பான முடிவுகளை நாம் எடுக்கவேண்டும். சமுதாயம் எதிர்பார்க்கும் நிலையில் நாம் இருக்கவேண்டும். மக்கள் எழுப்பும் குரலில் இருந்து அவர்களை ஆளும் சக்தி உருவாகிறது” என்று திரு செல்யாஸ்கொஸ் அரசாங்கத்தின் பதவி விலகல் அறிவிப்பில் விளக்கியிருந்தார்.
“மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் ஆணவத்துக்கும் அகந்தைக்கும் எதிரானது. அவர்கள் சிறந்த விழுமியங்களுக்காகவே போராடி மாறுபட்ட சமூகங்களை ஒன்றாக இணைத்துள்ளனர்” என்று அவர் மக்கள் எழுச்சியை வகைப்படுத்தியிருந்தார்.
ஆயிரக்கணக்கில் பல்கேரிய மக்கள் பல நகரங்களில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல அரசாங்கங்கள் பல்கேரியாவில் ஆட்சியில் இருந்தும் ஊழல் தொடர்ந்து மிகப் பெரிய பிரச்சினையாக அங்கு உருவெடுத்துள்ளது.
“இந்த அரசாங்கத்தின் பதவி விலகல் ஒரு ஐரோப்பிய நாடாக பல்கேரியா உருமாறுவதற்கான முதல்படி” என்று பல்கேரிய எதிர்கட்சித் தலைவரான அசென் வசிலெவ் கூறினார். அடுத்து நேர்மையான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்று இதற்கு முன்பு பல சூழ்ச்சிகளுடன் நடந்த தேர்தல்களைக் குறிப்பிட்டு அவர் கருத்து தெரிவித்தார்.
“குற்றக்கும்பல்களுக்கு எதிரான மக்களின் குரலைக் கேளுங்கள்” என்று பல்கேரிய அதிபர் ருமன் ரடேவ், இவ்வாரத் தொடக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்போது அரசாங்கத்துக்கு சமூக ஊடகத்தில் அறிவுறுத்தியிருந்தார்.

