தோக்கியோ: ஜப்பானில் பிப்ரவரி 8ஆம் தேதி காலை கடும் பனி பெய்ததால் ஷின்கன்சென் எனப்படும் ‘புல்லட்’ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சில ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் வேறு சில ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
தகாசாகி - நகாவ்கா நிலையங்களுக்கு இடையே அதிகாலை 5.40 மணியளவில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக கிழக்கு ஜப்பான் ரயில்வே தெரிவித்தது.
செண்டாய் - மொரியோகா நிலையங்களுக்கு இடையிலும் பனியால் ஏற்பட்ட இடையூறுகளால் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
பாதையில் படிந்திருக்கும் பனியை அகற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்வதால் ஃபுகுஷிமா - ஷின்ஜோ நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய ஜப்பான் ரயில்வே அதன் ‘புல்லட்’ ரயில்கள் சில குறைவான வேகத்தில் இயக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் பயண நேரம் 30 நிமிடங்களுக்குமேல் தாமதமாவதாகக் கூறப்பட்டது.
இவ்வேளையில், ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் குளிரும் கடும் பனிப்பொழிவும் தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.