சுங்கை பட்டானி: மலேசியாவில் உயர்நிலை ஒன்றாம் வகுப்பில் பயிலும் மாணவி ஒருவரின் கை, கால்களைக் கட்டி, வாயைப் பொத்திக் கழிவறைக்குள் அடைத்துவைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14), அந்த 13 வயதுச் சிறுமியை அவரது சக மாணவர்கள் இருவர் இவ்வாறு துன்புறுத்தினர்.
இது பொறாமையால் விளைந்த பகடிவதைச் சம்பவம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறை கூறியது.
மாணவியின் கைகளும் கால்களும் கழுத்துப் பட்டையால் (necktie) கட்டப்பட்டிருந்தன. கைக்குட்டை ஒன்று அவரது வாயில் திணிக்கப்பட்டிருந்தது.
மாணவியைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இரு மாணவர்களுக்கும் வயது 13 என்றும் பொறாமையில் அவ்வாறு செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்றும் காவல்துறையை மேற்கோள்காட்டி ‘புல்லட்டின்டிவி3’ தகவல் வெளியிட்டுள்ளது.
விசாரணை தொடரும் வேளையில் சந்தேகத்துக்குரிய மாணவர் இருவரையும் காவல்துறை தடுத்துவைத்துள்ளது.
இருவரும், அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி, வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் குற்றச்செயல்கள், அவற்றுக்கான தண்டனைகளைக் கையாளும் சட்டப் பிரிவுகளின்கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
சம்பவ நாளன்று, சிறுமியை அழைத்துச்செல்ல பள்ளி வாசலில் அவரது தாயார் காத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளி முடிந்து மாலை 6.30 மணிக்குப் பிறகும் சிறுமி வெளியே வராததால் கவலையடைந்த தாயாரும் பள்ளிப் பாதுகாப்பு அதிகாரியும் சிறுமியைத் தேடத் தொடங்கினர்.
கழிவறை ஒன்றில் அச்சிறுமி அடைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
மிகவும் பயந்து காணப்பட்ட சிறுமியின் கை, கால்களில் லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன.
சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் சிறுமியின் தாயார் காவல்துறையிடம் புகாரளித்ததாகக் கூறப்பட்டது.