கோலாலம்பூர்: மலேசியாவில் பகடிவதை பொறுத்துக்கொள்ளப்படுவதாலும் சில நேரங்களில் அது தற்காத்துப் பேசப்படுவதாலும், அது ஒரு கலாசாரமாகிவிட்டதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
பகடிவதை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவது அருவருப்பாக உள்ளது என்றார் அவர்.
“பகடிவதை செய்வோரைப் பொறுத்துக்கொள்வது நமக்கு இருக்கும் ஒரு பலவீனம்,” என்று திரு அன்வார் கூறினார்.
“அத்தகைய கலாசாரம் நிராகரிக்கப்பட்டால் பகடிவதை நடக்காது,” என்றும் திரு அன்வார் சொன்னார்.
தேசிய தற்காப்புப் பல்கலைக்கழக மாணவர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் படைப்பயிற்சி மாணவர் ஒருவர் அண்மையில் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, திரு அன்வாரின் கருத்துகள் வந்துள்ளன. இருப்பினும், அவர் அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
அச்சம்பவத்தை விசாரிப்பதாகக் கூறிய பல்கலைக்கழகம், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் ஒழுங்கு அல்லது சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாக உறுதியும் தெரிவித்தது.
தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள அத்தகைய இரண்டாவது சம்பவம் அது.
தொடர்புடைய செய்திகள்
நாட்டின் கல்வி முறையில், வன்செயல் நடத்தையும் கும்பல்காரர்களின் போக்கும் அபத்தமாக உள்ளதாகத் திரு அன்வார் கூறினர்.
கல்வி நிலையங்கள் அறிவாற்றலைப் பற்றிப் பேசுகின்றன ஒழிய குணநலன்கள், விழுமியங்கள் பற்றி அல்ல என்றார் அவர்.
மாணவர்கள் இடையே நிலவும் பகடிவதைக் கலாசாரத்தைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறியும் பொறுப்பை பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் இவ்வாண்டின் தொடக்கத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆறு முன்னாள் மாணவர்களுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அவர்கள் கடற்படைப் பயிற்சி அதிகாரியான ஸுல்ஃபர்ஹான் ஒஸ்மான் ஸுல்கர்னைனை ஏழாண்டுகளுக்கு முன்னர் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.