தோக்கியோ: பயணிகள் செலுத்திய பயணக் கட்டணத்தில் 1,000 யென்னைத் (S$9.20) திருடியதால் 29 ஆண்டுகாலமாகப் பணியாற்றிய பேருந்து ஓட்டுநர் தமது ஓய்வூதியத் தொகுப்பை இழக்க நேரிட்டது.
இச்சம்பவம் ஜப்பானின் கியோட்டோ நகரில் நிகழ்ந்துள்ளது.
பெயர் வெளியிடப்படாத அந்த ஓட்டுநர் கடந்த 2022ஆம் ஆண்டு ஆயிரம் யென் பணத்தைக் களவாடியது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனால், அவருக்குச் சேர வேண்டிய 12 மில்லியன் யென் (S$110,500) ஓய்வூதியத் தொகை மறுக்கப்பட்டது.
அதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது எனக் கூறி, கீழமை நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
ஆனால், மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் கியோட்டோ நகர நிர்வாகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.
அந்த ஆடவரின் செயல், அரசு நிர்வாகம் மீதும் பேருந்துச் சேவை மீதும் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் கீழறுப்பதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
தமது பணிக்காலத்தில் பலமுறை அந்த ஓட்டுநர் மேலதிகாரிகளால் கண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பணியில் இருந்தபோது பலமுறை அவர் மின்சிகரெட் புகைத்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கியோட்டோ நகர நிர்வாகம் வரவேற்றுள்ளது.
“பேருந்து ஓட்டுநர் ஒவ்வொருவரும் தனியாக வேலை செய்கின்றனர். பொதுமக்களின் பணத்தை அவர்களே கையாள்கின்றனர். அந்த ஓட்டுநர் பணத்தைக் கையாடல் செய்ததைக் கடுமையான குற்றமாகக் கருதினோம்,” என்று கியோட்டோ பொதுப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஷினிச்சி ஹிராய் என்ற அதிகாரி கூறினார்.
“எங்களது கடுமையான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், எங்கள் நிறுவனம் கவனக்குறைவுடையதாகி, பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிடக்கூடும்,” என்றும் அவர் சொன்னார்.