தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய நெடுஞ்சாலையில் பேருந்து - வாகனம் மோதல்; 15 மாணவர்கள் மரணம்

2 mins read
6457eb01-5b69-44b6-9c60-153db9c07f57
கெரிக் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் நால்வர் அடங்கிய குழு பேருந்து கவிழ்ந்து கிடந்ததைக் கண்டது. - படம்: இன்ஃபோ.செமாசா/ஃபேஸ்புக்

மலேசிய நெடுஞ்சாலையில் சுல்தான் இத்ரீஸ் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்று திங்கட்கிழமை (ஜூன் 9) அதிகாலையில் வேறொரு வாகனத்துடன் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.

பேராக் மாநிலம், கெரிக் எனும் சிற்றூரில் தாசிக் பாண்டிங் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் அதிகாலை 1.10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக மலேசிய ஊடகத் தகவல்கள் கூறின.

அப்பேருந்து திரங்கானு மாநிலம், ஜெர்த்தேவிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மலிங்கில் உள்ள பிரதான பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்றுகொண்டிருந்ததாக ஃபிரீ மலேசியா டுடே செய்தித்தளம் குறிப்பிட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற கெரிக் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு, அந்தப் பேருந்து கவிழ்ந்து கிடந்ததைக் கண்டறிந்தது.

அந்தப் பன்னோக்கு வாகனம் (MPV) வாய்க்காலில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மொத்தம் 48 பேர் சிக்கினர். அவர்களில் 42 பேர் மாணவர்கள், நால்வர் அந்த வாகனத்தில் இருந்தவர்கள், ஒருவர் பேருந்து ஓட்டுநர், மற்றொருவர் பேருந்து உதவியாளர் என்று பேராக் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நூர் அகமது தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்த இடத்திலேயே 13 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் மருத்துவமனையில் இருவர் இறந்ததாகவும் ஹுலு பேராக் குடிமைத் தற்காப்பு படை கூறியது. 31 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

“விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்தவுடன், பேருந்திலிருந்து சிலர் தாங்களாக வெளியேறிவிட்டதை கண்டறிந்தோம். விபத்தின்போது சிலர் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர், மற்றவர்கள் அதில் சிக்கிக்கொண்டனர்,” என்று திரு சபரோட்ஸி சொன்னார்.

பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் திரங்கானு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிவிட்டு அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பிக்கொண்டு இருந்தனர் என்றும் பல்கலைக்கழக உதவித் துணைவேந்தர் பேராசிரியர் நூர்காலித் சாலிமின் கூறினார்.

இதற்கிடையே, விபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவியை ஒருங்கிணைக்குமாறு உயர் கல்வித்துறை அமைச்சுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் அன்வாரும் அவருடைய மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் திங்கட்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இந்த விபத்து, சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதாகச் சொன்ன பிரதமர் அன்வார், சாலையில் செல்லும்போது அனைவரும் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1,000 ரிங்கிட்டும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளுக்காக ஆரம்ப உதவித்தொகையாக 2,000 ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்