புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோன்ல்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 25 விழுக்காட்டு வரிவிதித்ததைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளப்போவதாக செய்தி வெளியானது.
அதை இந்திய தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளதாக என்டிடிவி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவிலிருந்து புதிய ஆயுதங்களையும் விமானங்களையும் வாங்குவதை இந்தியா தற்போதைக்கு நிறுத்திக்கொள்வதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. தகவல் தெரிந்த இந்திய அதிகாரிகள் மூவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் அவ்வாறு தெரிவித்தது.
அதன் மூலம் திரு டிரம்ப்பின் விரிவிதிப்புக்கு இந்தியா முதன்முறையாக வெளிப்படையாக அதிருப்தி தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. திரு டிரம்ப்பின் வரிவிதிப்பால் இந்திய-அமெரிக்க உறவு பல ஆண்டுகள் காணாத அளவுக்கு மோசமடைந்துள்ளது.
“அமெரிக்காவிடமிருந்து தற்காப்பு தொடர்பான பொருள்களை வாங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளப்போவதாக வெளியான செய்தி பொய்த் தகவல், ஜோடிக்கப்பட்டது. தற்போது நடப்பில் இருக்கும் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதைத் தெளிவுப்படுத்தியுள்ளோம்,” என்று இந்தியத் தற்காப்பு அமைச்சில் உள்ள தகவல் தெரிந்தவர்கள் குறிப்பிட்டனர்.
அமெரிக்காவிடமிருந்து தற்காப்பு சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்குவதன் தொடர்பில் வரும் வாரங்களில் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வாஷிங்டனுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 6) திரு டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 25 விழுக்காட்டு வரிவிதித்தார். இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்குத் தண்டனையாக அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு டிரம்ப் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கான வரி 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளி நாடுகள் எவற்றின் மீதும் இவ்வளவு அதிகமாக வரிவிதிக்கப்பட்டதில்லை.

