கோலாலம்பூர்: பண்டார் மலேசியாவையும் செரி கெம்பாங்கானையும் இணைக்கும் புதிய மேம்பால விரைவுச்சாலைத் திட்டத்திற்கு மலேசிய அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்தார்.
கோலாலம்பூரின் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இத்திட்டம், கோலாலம்பூர் - சிரம்பான், மேக்ஸ், பெஸ்ராயா, என்.பி.இ,கெசாஸ், ஸ்பிரின்ட் உள்ளிட்ட பல முக்கிய விரைவுச்சாலைகளை ஒன்றிணைக்கும் மையப் பாதையாகச் செயல்படும்.
இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் பட்சத்தில், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிலையான தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய வணிக மையங்களுக்கும் புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையிலான பயணத்தை இப்பாதை விரைவாக்கும்.
மலேசியத் தீபகற்பத்தின் வடக்கு, தெற்கு, கிழக்குக் கரைப் பகுதிகளுக்கு இடையே பயணம் செய்வோருக்கு இது ஒரு சிறந்த மாற்றுப் பாதையாக அமையும்.
அத்துடன், சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு மையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை எளிதில் சென்றடையவும் பயண நேரத்தைக் குறைக்கவும் இச்சாலை உதவும்.
பொதுத்துறை, தனியார் துறை பங்காளித்துவத்துடன் திட்டத்தின் இறுதி வடிவமைப்பு குறித்த விரிவான ஆய்வுகள் தொடரும். பொதுமக்களின் நலன், நிதி நிலைத்தன்மை ஆகியவை முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தனியார் துறை நிதியுதவி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், கூட்டரசு அரசாங்கத்திற்கு எவ்வித நேரடி நிதிச் சுமையும் இருக்காது.
வெளிப்படையான முறையில் திட்டத்தை அமல்படுத்துவதையும், நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் திறனுள்ள போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள், நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான அம்சங்களும் இந்த விரிவான ஆய்வின்போது கவனத்தில் கொள்ளப்படும்.
மேலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிற உள்கட்டமைப்புத் தீர்வுகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.


