பிரதமரின் பதவிக்கால வரம்புக்கு மலேசிய அமைச்சரவை பச்சைக்கொடி

பிரதமரின் பதவிக்கால வரம்புக்கு மலேசிய அமைச்சரவை பச்சைக்கொடி

2 mins read
17b99b5b-56cd-4504-b4c7-da2e0882ce04
பொறுப்புணர்வை வலுப்படுத்துவது, தலைமைப் பதவி தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது, கூட்டரசு அரசியலமைப்பின்படி ஆட்சி செய்வது ஆகியவற்றுக்குப் பிரதமரின் பதவிக்கால வரம்பு மிகவும் முக்கியமானது என்று மலேசியப் பிரதமர் அலுவலக ( சட்டம் மற்றும் அமைப்புகள் சீர்திருத்தம்) அமைச்சர் அசாலினா தெரிவித்தார். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமரின் பதவிக்காலத்துக்கு பத்தாண்டு வரம்பு விதிக்க முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அந்நாட்டு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக மலேசியப் பிரதமர் அலுவலக ( சட்டம் மற்றும் அமைப்புகள் சீர்திருத்தம்) அமைச்சர் அசாலினா ஓத்மான் சனிக்கிழமையன்று (ஜனவரி 31) தெரிவித்தார்.

பிரதமரின் பதவிக்கால வரம்பு குறித்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

பொறுப்புணர்வை வலுப்படுத்துவது, தலைமைப் பதவி தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது, கூட்டரசு அரசியலமைப்பின்படி ஆட்சி செய்வது ஆகியவற்றுக்கு இது மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் அசாலினா தெரிவித்தார்.

“தனிநபர் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் இருப்பதைத் தடுக்கவும் ஜனநாயக முறையை வலுப்படுத்தவும் நாட்டின் தலைமைத்துவம் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மேம்படுத்தவும் பதவிக்கால வரம்புப் பரிந்துரை இலக்கு கொண்டுள்ளது. அனைத்துலக அளவில் நடப்பில் உள்ள முதிர்ந்த ஜனநாயக முறைக்கு உட்பட்டு புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதே நோக்கம்,” என்று அமைச்சர் அசாலினா கூறினார்.

கொள்கைகள், முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், பொதுமக்களின் கருத்துகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்த பின்னரே பிரதமரின் பதவிக்கால வரம்புக்குப் பச்சைக்கொடி காட்ட அமைச்சரவை முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் மலேசிய அரசாங்கம் கூட்டரசு அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களைச் செய்யும் என்றார் அவர்.

மலேசியப் பிரதமருக்கான பத்தாண்டு பதவிக்கால வரம்பு தொடர்பான மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்யும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

பிரதமர் பதவிக்கால வரம்பு தொடர்பாக மலேசியர்களிடம் அந்நாட்டின் சட்ட விவகாரங்கள் பிரிவு ஆய்வு நடத்தி கருத்து சேகரித்தது.

பதவிக்கால வரம்பு பற்றிய பரிந்துரையைப் பெரும்பாலானோர் வரவேற்றனர்.

ஒரு வாரமாக நடத்தப்பட்ட ஆய்வில் 3,722 பேர் பங்கெடுத்ததாக மலேசிய சட்ட விவகாரப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் (கொள்கை, மேம்பாடு) எஸ். புனிதா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்