வெள்ளை மாளிகையில் கூண்டுச் சண்டை: 80வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் டிரம்ப்

வெள்ளை மாளிகையில் கூண்டுச் சண்டை: 80வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் டிரம்ப்

2 mins read
ce097b24-8367-427b-9caf-a4d9c0613a33
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு கொண்டாட்டங்களுடன் இணைத்து, 60 மில்லியன் அமெரிக்க டாலர் (S$77 மில்லியன்) செலவில் ‘யுஎஃப்சி ஃப்ரீடம் 250’ என்ற பெயரில் அதிரடிப் போட்டி நடத்தப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜூன் 14 அன்று தனது 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக வயதில் அதிபர் பதவியேற்ற அவர், இந்த நாளைக் குறிக்கும் வகையில் வெள்ளை மாளிகை புல்வெளியில் பிரம்மாண்ட கூண்டுச் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு கொண்டாட்டங்களுடன் இணைத்து, 60 மில்லியன் அமெரிக்க டாலர் (S$77 மில்லியன்) செலவில் ‘யுஎஃப்சி ஃப்ரீடம் 250’ என்ற பெயரில் இந்த அதிரடிப் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் 14 முன்னணி யுஎஃப்சி வீரர்கள் மோதவுள்ளனர். அதிபர் டிரம்ப்பின் அரசியல் ஆதரவுத் தளத்தைப் பிரதிபலிக்கும் இளம் ஆண் ஆதரவாளர்களைக் கவர்ந்துள்ள இந்த விளையாட்டுப் போட்டிக்கான முழுச் செலவையும் யுஎஃப்சி அமைப்பே ஏற்கிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஈரானுடனான போர் மற்றும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் தவிக்கும் வேளையில், வெள்ளை மாளிகை வளாகத்தில் இத்தகைய வன்முறை சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துவது முறையல்ல எனப் பல விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும், இது நாட்டின் வீரர்களையும் சுதந்திரத்தையும் கொண்டாடும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி என்று யுஎஃப்சி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியை நிறுத்த கோரி உள்ளூர்வாசிகள் தொடர்ந்த வழக்கையும் அமெரிக்க நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) தள்ளுபடி செய்தது.

இந்தப் பிரம்மாண்டு ஏற்பாடு, அதிபர் டிரம்ப்பின் உடல்நலம் குறித்த கேள்விகளை ஓரங்கட்டியுள்ளது. அதிபர் டிரம்ப்புக்கும் சில உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு 80 வயதாகிவிட்டது என்பதில் தமக்கு அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை என்றபோதிலும் வேறு வழியில்லை என்று காணொளி ஒன்றில் அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடோனல்ட் டிரம்ப்பிறந்தநாள்