பெய்ருட்: இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியில் 21 நாள் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போர் நிறுத்தம் உடனடியாக நடப்புக்கு வர வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன.
காஸா போர் நிறுத்த முயற்சிகளையும் ஆதரிப்பதாக அந்நாடுகள் கூறின.
அரசதந்திர ரீதியிலான தீர்வை எட்டும் நோக்குடன் பேச்சுவார்த்தை நடத்த போர் நிறுத்தம் வாய்ப்பளிக்கும் என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்காலிகப் போர் நிறுத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த இஸ்ரேலிய, லெபனான் அரசாங்கங்கள் உட்பட இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்த அறிக்கையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
அவற்றில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கும்.
லெபனான் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களை செப்டம்பர் 25ஆம் தேதியன்று இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
அதில் குறைந்தது 72 பேர் மாண்டதாக லெபனானிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தாக்குதலில் குறைந்தது 223 பேர் காயமடைந்ததாக அமைச்சு கூறியது.
இதற்கிடையே, ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக லெபனானில் நிலம் வழி தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மத்தியக் கிழக்கில் போர் மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பகை உணர்வைக் குறைத்துக்கொள்ளும்படி கடந்த பல மாதங்களாக இஸ்ரேலிடமும் லெபனானிடமும் அமெரிக்கா பலமுறை கேட்டுக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை வரவேற்கும் என்றும் அந்நாடு அரசதந்திர ரீதியிலான தீர்வை விரும்புவதாகவும் ஐநாவுக்கான இஸ்ரேலியத் தூதர் டேனி டெனோன் செப்டம்பர் 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.

