டக்கார்: இளையர் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்துவதற்கு முன்னதாக, ஒரே பாலின உறவுகளுக்கு எதிரான நடவடிக்கையை செனகல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு திங்கட்கிழமை (அக்டோபர் 12) கூறியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல், ஒரே பாலின உறவுகளுக்கான அதிகபட்ச தண்டனையை இரட்டிப்பாக்கி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக அதிகரிப்பதற்கான புதிய சட்டத்தை இயற்றியது.
அதிக அளவு சமயப் பற்று கொண்ட, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்நாட்டில், அண்மைய மாதங்களில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான வெறுப்பு தீவிரமடைந்துள்ளது.
ஒரே பாலின உறவில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுப் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், ‘இயற்கைக்கு மாறான செயல்களில்’ ஈடுபட்டதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் 71 ஆடவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
செனகல் சட்டத்தில் ஒரே பாலின உறவைக் குறிக்க அச்சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை நடைபெறவுள்ள நான்காவது இளையர் ஒலிம்பிக் போட்டிகளுக்காகக் கிட்டத்தட்ட 2,700 இளம் விளையாட்டு வீரர்களைச் செனகல் வரவேற்கவுள்ளது.
அதன் மூலம் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அந்நாடு ஏற்றுநடத்தவுள்ளது.
அந்நாட்டின் கடும் நடவடிக்கையைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் சாசனம் அனைத்துப் பாகுபாட்டையும் தடைசெய்வதுடன், போட்டி நடத்தும் நாடுகள் மனித உரிமைகளையும் மனிதக் கண்ணியத்தையும் மதிக்கவேண்டும்,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
