மலேசியாவில் உள்ள பழங்கால இந்துக் கோயில்களின் வரலாற்றை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்: லோக பாலா மோகன்

மலேசியாவில் உள்ள பழங்கால இந்துக் கோயில்களின் வரலாற்றை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்: லோக பாலா மோகன்

2 mins read
c15555f6-e85e-4d2b-b0c9-86473989716a
மலேசியாவின் மக்கள் முற்போக்குக் கட்சியின் தலைவர் லோக பாலா மோகன். - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குவந்தான்: மலேசியாவில் உள்ள ஆவணமற்ற இந்துக் கோயில்கள் தொடர்பான விவகாரத்துக்கு வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும், நிலங்களை ஒழுங்குபடுத்தும், சமூகக் கௌரவத்தை மீட்கும் தேசியக் கொள்கை மூலம் தீர்வு காண வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு அந்நாட்டின் மக்கள் முற்போக்குக் கட்சியின் தலைவர் லோக பாலா மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆவணமற்ற இந்துக் கோயில்களை இடிக்க முடிவெடுப்பதற்கு முன்பு அதற்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“ஆவணமற்ற இந்துக் கோயில்கள் புதியவையாக இருந்தால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தகுந்த ஆவணங்கள் இல்லை என்பதற்காகப் பழங்காலத்து இந்துக் கோயில்களை இடிப்பது நியாயமன்று.

“இந்த விவகாரத்தை இனி தள்ளிப்போடக்கூடாது. வரலாறு தெரியாமல் சிலர் இக்கோயில்கள் சட்டவிரோதமானவை என்று கூறுகின்றனர்,” என்றார் திரு லோக பாலா மோகன்.

ஆவணமற்ற இந்துக் கோயில்களின் வரலாறு, பின்னணி ஆகியவற்றை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

அவ்வாறு செய்யாவிடில் நாட்டு மக்களிடையே இருக்கும் சமய நல்லிணக்கம் கடுமையாகப் பாதிப்படையும் என்று திரு லோக பாலா மோகன் தெரிவித்தார்.

“1840களில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களை மலாயாவுக்குத் தொழிலாளர்களாக அழைத்து வந்தனர். 1844ஆம் ஆண்டுக்கும் 1910ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஏறத்தாழ 250,000 இந்தியர்கள் மலாயா வந்தடைந்தனர்.

“மலேசியப் பொருளியலின் முதுகெலும்பாக ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டத் துறை இருக்கையில், நாடு தழுவிய நிலையில் ஏறத்தாழ 3,000 தோட்டங்கள் இந்தியத் தொழிலாளர்களை அதிகம் நம்பியிருந்தன.

“அப்போது இத்தகைய தோட்டங்களில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்களுக்கு வசிப்பிடம், தமிழ்ப் பள்ளிகள், கோயில்கள் ஆகியவை இருந்தன. ஆனால் அவற்றுக்கான ஆவணங்கள் இல்லை. பிரிட்டிஷ்காரர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததால் இந்நிலை ஏற்பட்டது.

“1970களிலிருந்து மலேசியா தொழில்துறை மற்றும் நகர்ப்புறப் பொருளியலுக்கு மாறியபோது இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் பலர் கைவிடப்பட்டனர். அவர்களில் பலர் வேலை இழந்தனர். இந்தியத் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் வறுமையால் பலர் வாடினர். வசிப்பதற்கு ஏற்புடைய இடம் இன்றி தவித்தனர். குறைந்த சம்பளத்துடனான வேலை மட்டுமே பலருக்குக் கிடைத்தது.

“இந்தியர்களுக்கு முறையான மாற்று குடியிருப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இன்றுவரை பல பிரச்சினைகள் உள்ளன. ஆவணமற்ற இந்துக் கோயில்களும் இவற்றில் அடங்கும்,” என்று திரு லோக பாலா மோகன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்