கோலாலம்பூர்: மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்குக் கட்டாயச் சிறைத்தண்டனை உட்பட கடுமையான நடவடிக்கைகளை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விபத்தில் மரணம் அல்லது கடுமையான காயங்களை ஏற்படுத்துவோரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று மலேசியாவின் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தை முழுமையாக மறுஆய்வு செய்து, போதையில் வாகனம் ஓட்டுவதை வெறும் போக்குவரத்து விதிமீறலாகக் கருதாமல் பொதுப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகக் கருதவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
உரிமமின்றி மது விற்கும் கடைகளை மூடவும் குடியிருப்புப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு அருகில் மது விற்பனையைத் தடை செய்யவும் அவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், 24 மணி நேர மது விற்பனையைக் கட்டுப்படுத்துவதுடன், புகையிலைப் பொருள்களைப் போல மதுபானங்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வார இறுதிகள், பண்டிகைக் காலங்களில் இரவு நேரச் சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த மாத தொடக்கத்தில் ஜாலான் அம்பாங் பகுதியில் மதுபோதையில் இருந்த ஆடவர் ஓட்டிய கார் மோதி உயிரிழந்த ஏ. துரைசிங்கம், ஏ. மேனகா ஆகியோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர், அவர் இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். இதுபோன்ற சோக நிகழ்வுகள் இனியும் தொடரக் கூடாது எனவும் மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

