கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டுச் சுகாதாரத் துறையைச் சேர்ந்த நான்கு ஊழியர்களும் விமானியும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மருத்துவப் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சரவாக்கின் லோங் லெல்லான் விமான ஓடுபாதைக்கு அருகில் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 8) இந்த ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது.
அனைத்து விமானங்கள், வசதிகள், பராமரிப்புப் பதிவேடுகள் மற்றும் செயல்பாட்டுப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து முழுமையான தணிக்கையைச் செய்து முடிக்கும் வரை ‘ஃபிளையிங் டாக்டர் சர்விசஸ்’ சேவையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ‘ஹார்த்தால் டாக்டர் கொன்ட்ராக்’ என்ற மருத்துவ ஆதரவுக் குழு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
பிஓ-105 எஸ் ரகத்தைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் லோங் லெல்லாங் சிறு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 வயது விமானி கேப்டன் ஸைனோல் அஃபிக் பீ ஷாம், 33 வயது மருத்துவர் ஐனுல் பாரா கமருடின், 31 வயது மருத்துவ உதவி அதிகாரி அலெக்சன் அடிட் ஹென்ரி மற்றும் தாதியர்களான 40 வயது டெப்ரா மோசெட், 44 வயது ஜெஸ்ஸி பாயா ஜோக் ஆகிய ஐந்தின்மரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தனியாருக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர், மீரியிலிருந்து பா லாய், லாங் சியூட் மற்றும் லாங் லேலாங் ஆகிய மூன்று இடங்களுக்குச் செல்லும் ‘ஃபிளையிங் டாக்டர் சர்விசஸ்’ செயல்பாடுகளுக்காகக் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
இந்த விபத்து நிகழ்ந்தபோதிலும், ‘ஃபிளையிங் டாக்டர் சர்விசஸ்’ தொடர்ந்து செயல்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்தது. அமைச்சின் இந்த முடிவை ‘ஹார்த்தால் டாக்டர் கொன்ட்ராக்’ அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அது அறிக்கை வெளியிட்டது.
“சம்பந்தப்பட்ட விமானங்கள், வசதிகள், செயல்பாட்டு முறைமை மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யாமல், சேவை வழக்கம் போல் தொடரும் என்று அளிக்கப்படும் வெற்று வாக்குறுதிகளை நாங்கள் ஏற்க மறுக்கிறோம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தெளிவான பாதுகாப்பு நடவடிக்கைகள், பொறுப்பு ஏற்பு, ஆய்வு மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு இல்லாமல் சேவை தொடரும் என்று வெளியிடும் அறிக்கை போதுமானதாக இல்லை. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது,” என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

