அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்திவருவதால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்வதை ஈரான் தடுத்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், கம்போடியா தனது எரிபொருள் தேவையைச் சரியாக வைத்துக்கொள்ளச் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள விநியோக நிறுவனங்களிடம் உதவி கேட்டுள்ளது.
சீனாவும் வியட்னாமும் கம்போடியாவுக்கு வழங்கி வந்த எரிபொருள் விநியோக அளவை மத்திய கிழக்குப் பூசல் காரணமாகக் குறைத்துள்ளன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கம்போடியாவின் எரிசக்தி அமைச்சு இறங்கியுள்ளது.
18 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கம்போடியாவில் 6,300 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் மூன்றில் ஒரு பெட்ரோல் நிலையம் கடந்த வாரம் மூடப்பட்டது.
உள்ளூர்ச் சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக வியட்னாமும் சீனாவும் எரிபொருள் ஏற்றுமதியை இம்மாத இறுதி வரை கட்டுப்படுத்தியுள்ளன.
எல்லையில் நடந்த பூசல் காரணமாகத் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் ஜூலை மாதத்திலிருந்து எரிபொருள் வர்த்தகம் நடைபெறவில்லை.
2024ஆம் ஆண்டு தரவுகள்படி கம்போடியாவின் எரிபொருள் தேவையில் 60 விழுக்காட்டைத் தாய்லாந்தும் வியட்னாமும் பூர்த்தி செய்தன. அதற்கு அடுத்த இடங்களில் சீனா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
“தற்போது சில நாடுகளில் எரிபொருளுக்கான ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் மற்ற நாடுகளிடம் உதவி கேட்டுள்ளோம்,” என்றது கம்போடியாவின் எரிசக்தி அமைச்சு.

