200 மோசடி நிலையங்களை மூடியது கம்போடியா

200 மோசடி நிலையங்களை மூடியது கம்போடியா

2 mins read
போலி இந்தியக் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிப்பு
770f5ddc-188d-48ef-b55b-b892d115d828
கம்போடியாவின் ஆட்டர் மியான்ச்சே பகுதியில் செயல்பட்டு வந்த இந்த மோசடி நிலையம், கடந்த டிசம்பரில் தாய்லாந்து-கம்போடியா இடையிலான எல்லைப் பிரச்சினையின்போது தாய்லாந்து ராணுவத்தினரால் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

நோம்பென்: எல்லை கடந்த மோசடிக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் மூலம் கடந்த சில வாரங்களில் கிட்டத்தட்ட 200 மோசடி நிலையங்களை மூடிவிட்டதாகக் கம்போடியா தெரிவித்துள்ளது.

“ஏறக்குறைய அத்தகைய 190 இடங்களை மூடிவிட்டோம்,” என்று இணைய மோசடித் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் சாய் சினாரித் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்மோசடி நிலையங்களுடன் தொடர்புடைய 173 முக்கியப் புள்ளிகள் கைதுசெய்யப்பட்டு விட்டனர். அத்துடன், அம்மையங்களில் பணிபுரிந்த கிட்டத்தட்ட 11,000 பேர் கடந்த ஆண்டிலிருந்து அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். அந்த ஊழியர்களில் பலரும் கடத்தப்பட்டு, மோசமான சூழல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கம்பாட் என்னுமிடத்தில் செயல்பட்டு வந்த மோசடி நிலையத்திற்குச் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு பெரிய பெரிய பணியறைகளில் ஏராளமான கணினிகளும் மேசைகளும் இருந்தன என்றும் தாங்கள் குறிவைத்துள்ள தாய்லாந்து நாட்டவரை எவ்வாறு மோசடிசெய்வது என்பது குறித்த ஆவணங்கள் சிதறிக் கிடந்தன என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

அத்துடன், தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கான சிற்றறைகளும் போலியான இந்தியக் காவல் நிலையமும் இருந்ததாகக் கூறப்பட்டது.

அதுபற்றிக் கருத்தறிய நோம்பென்னில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது உடனடியாக பதில் கிடைக்கவில்லை என்று அச்செய்தி குறிப்பிட்டது.

கம்போடியாவின் ஓஸ்மாக் மோசடி வளாகத்தில் இந்தியக் கொடியும் டெல்லி காவல்துறைக் கொடியும் கண்டெடுக்கப்பட்டன.
கம்போடியாவின் ஓஸ்மாக் மோசடி வளாகத்தில் இந்தியக் கொடியும் டெல்லி காவல்துறைக் கொடியும் கண்டெடுக்கப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

‘மைகெசினோ’ என அழைக்கப்பட்ட கம்பாட் சூதாட்டக்கூட வளாகத்தினுள்ளிருந்து எவரும் கைதுசெய்யப்படவில்லை. அதன் உரிமையாளராகக் கூறப்படும் லை கோங் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, அதன் ஊழியர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டதாகக் காவல்துறை கூறியது.

அந்த மோசடி நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6,000 முதல் 7,000 பேர்வரை பணிபுரிந்து வந்தனர் என்றும் அத்தனை பேரையும் தடுத்து நிறுத்தும் அளவிற்குத் தங்களிடம் மனிதவளம் இல்லை என்றும் கம்பாட் வட்டாரக் காவல்துறைத் தலைவர் குறிப்பிட்டார்.

தன் நாட்டிற்குள் மோசடி நிலையங்கள் செயல்படவில்லை என்று கம்போடியா வெகுகாலமாகக் கூறிவந்தது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மூலமும் அவற்றின் பரவலைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.

இந்நிலையில், அண்மை நடவடிக்கைகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மோசடி நிலையங்களை மூடி, முக்கியப் பேர்வழிகளைக் கைதுசெய்ய இலக்கு கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்