நோம்பென்: இணையக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள கம்போடியா, இவ்வாண்டில் மட்டும் இணைய மோசடிப் பேர்வழிகள் எனச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினர் கிட்டத்தட்ட 18,000 பேரை நாடுகடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இணையவழி மோசடிக்கு எதிரான நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டுக் குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் சோக் வீஸ்னா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) தெரிவித்தார்.
“2026 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 9 வரை, இணைய மோசடிப் பேர்வழிகள் எனச் சந்தேகிக்கப்படும் 17,700க்கும் மேற்பட்டோர் உட்பட 50,000க்கும் அதிகமான வெளிநாட்டினரை நாடுகடத்தினோம்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
காலாவதியான கடப்பிதழ்கள், விசாக்கள் அல்லது வேலை அனுமதிச்சீட்டு வைத்திராதவர்கள், தலைமறைவாக இருந்தவர்கள் உள்ளிட்டோரும் நாடுகடத்தப்பட்டோரில் அடங்குவர்.
இந்நிலையில், கம்போடியாவின் நற்பெயரைக் காப்பாற்றவும், பெரிய இணைய மோசடி அமைப்புகளை முடக்கவும் இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகள் முக்கியமானவையாக இருந்தாலும், அவை ஒரு தற்காலிகத் தீர்வாகவே இருக்கும் என்று கம்போடியாவின் தொழில்நுட்ப, அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள சீனா-ஆசியான் ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் தொங் மெங்டேவிட் குறிப்பிட்டார்.
“இந்தப் போராட்டத்தில் கம்போடியா உண்மையாகவே வெற்றிபெற வேண்டுமெனில், இணைய மோசடிக் கும்பல்களின் மூளையாகச் செயல்படுவோர்மீது குறிவைக்க வேண்டும். அந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகள் தழைத்தோங்க உதவும் உள்ளூர்ப் பாதுகாப்பு அமைப்புகளைச் தகர்க்க வேண்டும்,” என்றார் அவர்.
ஆட்கடத்தல், ஊழல் ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முழுமையாகத் தீர்வுகாணும் வரை இப்பிரச்சினைக்கான மூலகாரணம் நீடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் பாதுகாப்பைப் பேணி, உலக அரங்கில் தனது நற்பெயரை மீட்டெடுக்கும் நோக்கில், இணைய மோசடிக் கும்பல்களுக்கு எதிராக வரலாறு காணாத வகையில் கம்போடியா நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


