நோம்பென்: கம்போடியாவில் செயல்படும் மோசடி நிலையங்களைக் குறிவைத்து அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மோசடி நிலையங்களில் பிடிபட்ட இரண்டு தென்கொரியர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு கம்போடிய அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) இன்சியான் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்ததாகத் தென்கொரியக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த இரண்டு தென்கொரியர்களும் எவ்விதமான மோசடி வேலைகள் செய்தனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இவ்வாரத் தொடக்கத்திலும் இரண்டு தென்கொரியர்கள் கம்போடியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில், பல்வேறு மோசடி நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய 59 தென்கொரியர்களையும் நாடு கடத்தவுள்ளதாகக் கம்போடியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தென்கொரிய அரசாங்கம் கம்போடியாவுக்குச் சிறப்புக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.
கம்போடியாவிலிருந்து போலியான வேலை விளம்பரங்களைப் பதிவிட்டு தென்கொரியர்களை ஈர்த்து அவர்களைக் கடத்தும் நடவடிக்கை இடம்பெறுகிறது. அதைத் தடுக்கும் நோக்கில் சிறப்புக் குழு செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை கம்போடியாவில் 63 தென்கொரியர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவார்கள் என்று சோல் உறுதியளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கம்போடியாவில் 200,000க்கும் அதிகமானவர்கள் மோசடி நிலையங்களில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட 1,000 பேர் தென்கொரியர்கள் என்று கூறப்படுகிறது.
போலி முதலீடுகள், மின்னிலக்க நாணயங்கள் உள்ளிட்ட பல மோசடி வேலைகள் அந்த நிலையங்களில் நடக்கின்றன.