நோம்பென்: கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட், ஆகஸ்ட் 5ஆம் தேதி, மெக்கோங் ஆற்றைக் கால்வாய் மூலம் கடலுடன் இணைப்பதற்கான புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
சர்ச்சைக்குரிய இத்திட்டம், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.2 பில்லியன்) செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
தலைநகர் நோம்பென்னிற்குத் தென்கிழக்கே அமைந்துள்ள பிரெக் டெக்கியோவில் வாண வேடிக்கை, மேள தாளத்துடன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் உரையாற்றிய பிரதமர் மானெட், 180 கிலோமீட்டர் நீளத்திற்குக் கால்வாய் அமைக்கும் இத்திட்டம் வரலாற்றுச் சிறப்பானது என்று கூறினார்.
பல்லாயிரக்கணக்கானோர் திரு மானெட், அவரது தந்தையும் கம்போடியாவின் முன்னாள் பிரதமருமான திரு ஹுன் சென் இருவரின் படங்களைத் தாங்கிய டி-சட்டைகளை அணிந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“இந்தக் கால்வாயை எப்பாடுபட்டாவது நாம் உருவாக்கியே தீருவோம்,” என்று கூறிய திரு மானெட், தமது மனைவி பிச் சன்மோனியுடன் இணைந்து திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
ஃபுனான் டெக்கோ கால்வாய், நோம்பென்னுக்குத் தென்கிழக்கே உள்ள ஒரு பகுதியிலிருந்து மெக்கோங் ஆற்றை தாய்லாந்து வளைகுடாவிலுள்ள கடல்பரப்புடன் இணைக்கும். இத்திட்டம் 2028ஆம் ஆண்டு நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கம்போடியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு, மெக்கோங் ஆற்றின் வழியாக வியட்னாமியத் துறைமுகங்களைப் பயன்படுத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
கால்வாய் அமைக்கப்பட்டதும் இந்த விகிதம் கிட்டத்தட்ட 10 விழுக்காடாகக் குறையும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இருப்பினும், 100 மீட்டர் அகலமும் 5.4 மீட்டர் ஆழமும் கொண்ட இக்கால்வாய் கம்போடியாவின் பெரிய பொருளியல் இலக்குகளை எட்ட எந்த அளவிற்கு உதவும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

