கம்போடிய விளையாட்டாளர்கள் போட்டிகளிலிருந்து விலகி நாடு திரும்பினர்

2 mins read
579899c4-dc8a-4e80-9676-97d9049ed217
தாய்லாந்தில் நடந்துவரும் 33ஆம் தென்கிழக்காசிய விளையாட்டிப் போட்டிகளின் தொடக்கத்தில் 12 போட்டிகளில் பங்கெடுக்க கம்போடியா பதிவுசெய்திருந்தது. - படம்: த நொம் பென் போஸ்ட்

நோம்பென்: தாய்லாந்தில் நடைபெறும் 33ஆம் தென்கிழக்காசிய விளையாட்டுப்போட்டிகளில் பாதுகாப்பு கருதி விலகிய கம்போடிய விளையாட்டாளர்கள், புதன்கிழமை (டிசம்பர் 10) நாடு திரும்பியுள்ளனர்.

பன்னிரண்டு போட்டிகளில் 137 கம்போடிய விளையாட்டாளர்கள் பங்கெடுக்கவிருந்தனர். எல்லையில் தாய்லாந்துடன் நடந்துவரும் சண்டையால் அவர்களுக்குப் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்று அவர்களின் குடும்பத்தார்கள் அச்சம் தெரிவித்தனர்.

எனவே அக்குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டாளர்கள் அனைவரும் கம்போடியா திரும்பிவிட்டனர் என்று அந்நாட்டு தேசிய ஒலிம்பிக்ஸ் நிர்வாகக் குழுவின் (NOCC) பொதுச் செயலாளர் வாத் சாம்ரோயுன் விளக்கம் அளித்தார்.

“எந்தவொரு போட்டியிலும் பங்கெடுக்காமல் பாதியில் வெளியேறினாலும் தென்கிழக்காசிய ஆசியான் கூட்டமைப்பின் பொறுப்புள்ள உறுப்பினராக, கம்போடியா, அனைத்துலக விளையாட்டு அரசதந்திர நடைமுறையின்படி நடந்துகொண்டுள்ளது” என்று திரு வாத் சாம்ரோயுன் செய்தியாளர்களிடம் கூறினார்.

“நாங்கள் போட்டியிடுவதற்கு விளையாட்டாளர்களே முக்கியமானவர்கள், அவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததை நாங்கள் பரிசீலிக்கவேண்டியுள்ளது. கம்போடிய அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒலிம்பிக்ஸ் மன்றத்தின் அனைத்து சந்திப்புக் கூட்டங்களிலும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் கொடியேற்றத்துடன் நடந்த திறப்பு விழாவிலும் கலந்துகொண்டோம். விளையாட்டுப் போட்டிகளின் அரசதந்திரக் கடமைகளை நாங்கள் பூர்த்திசெய்துள்ளோம்” எனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தாய்லாந்துக்கு பயணம் செய்த நீச்சல், மேசைப்பந்து, திடல்தடம் உள்ளிட்ட ஏழு விளையாட்டுகளுக்கான குழுக்களும் கம்போடியா திரும்பிவிட்டன. தாய்லாந்துக்குப் புறப்படாத சில போட்டிகளுக்கான ஆறு குழுக்கள் கம்போடியாவிலேயே இருந்துவிட்டன.

தென்கிழக்காசியப் போட்டிகளின் கம்போடிய விளையாட்டாளர்களின் ஒருங்கிணைப்புக்கான தலைவர் நாஹன் சொக்ஸ்விசால், அனைத்து பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்காவிட்டாலும் அதனை ஒரு வெற்றியாகவே கருதவேண்டும் என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்