கம்போடியாவில் இணையக் குற்ற முறியடிப்பு: 1,000 பேர் கைது

1 mins read
8597f264-b00a-4da8-b4c0-e104c4990fdf
தலைநகர் நோம்பென்னில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைதான சந்தேக நபர்கள். - படம்: இபிஏ

நோம்பென்: கம்போடியாவில் இணைய மோசடிச் செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்போடியக் காவல்துறை புதன்கிழமை (ஜூலை 16) இத்தகவலை வெளியிட்டது. இணைய மோசடிச் செயல்கள் மேற்கொள்ளப்படும் இடங்களில் சோதனை நடத்துமாறு அந்நாட்டுப் பிரதமர் ஹுன் மானெட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய நாட்டுச் சபை, தென்கிழக்காசிய வட்டாரத்தை இணைய மோசடி நிலையங்களுக்கான மையமாக வகைப்படுத்தியுள்ளது. மோசடி நிலையங்களில் வேலை செய்வோர் பொதுவாக காதல், வர்த்தக ரீதியான ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டு சமூக ஊடகப் பயனர்களை ஈர்ப்பர். அத்தகைய செயல்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 40 பில்லியன் டாலர் (51.4 பில்லியன் வெள்ளி) பறிபோகிறது.

இணைய மோசடிச் செயல்களைத் தடுத்து அவற்றை முறியடிக்குமாறு திரு ஹுன் மானெட் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் ராணுவத்துக்கும் உத்தரவிட்டிருந்தார். தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிகாரிகள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அவர் விடுத்த அந்த உத்தரவு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வெளிப்படையாகத் தெரியவந்தது.

கடந்த மூன்று நாள்களாக அதிகாரிகள் கம்போடியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்