கோலாலம்பூர்: சிங்கப்பூருடனான நிலவழிச் சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகளின் சீருடைகளில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் டாக்டர் ஷம்சுல் அன்வார் நசாரா தெரிவித்துள்ளார்.
ஊழலைத் தடுக்க இந்நடவடிக்கை கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
“இத்திட்டத்தின் முதல் கட்டமாக சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுக் கட்டடத்திலும் சுல்தான் அபு பக்கர் குடிநுழைவு வளாகத்திலும் பணியாற்றும் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகளின் சீருடைகளில் கேமராக்கள் பொருத்த உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.
“இந்தத் திட்டத்துக்கு 13வது மலேசியத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கப்படும்,” என்று டிசம்பர் 2ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார் டாக்டர் ஷம்சுல் அன்வார்.
புதிய கடப்பிதழைப் பெற்றுக்கொண்டபோது அதற்கான நெகிழி உறைக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 5 ரிங்கிட் (S$1.50) செலுத்த வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர்எஸ்என். ராயர் நாடாளுமன்றத்தில் விளக்கம் கேட்டார்.
ஊழல் குற்றங்களைத் தடுக்க மலேசிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் இலக்கு எட்டப்படுவதை உறுதி செய்ய குடிநுழைவு அதிகாரிகளின் சீருடைகளில் கேமராக்கள் பொருத்தப்படுமா என்று திரு ராயர் கேள்வி எழுப்பியிருந்தார்.
குடிநுழைவு அதிகாரிகள் கடப்பிதழ்களுக்கான நெகிழி உறைகளை விற்பனை செய்தது தொடர்பான விவகாரம் குறித்து பேசிய டாக்டர் ஷம்சுல் அன்வார், அந்த உறைகளைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை என்றும் அவற்றை வாங்கும் முடிவு பயணிகளுடையது என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சோதனைச்சாவடிகளில் பயணிகள் போக்குவரத்து சுமுகமாக இருக்க முக்கிய சோதனைச்சாவடிகளில் கியூஆர் குடிநுழைவு முறையை நடைமுறைப்படுத்த உள்துறை அமைச்சு இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குள் நுழையும் மோட்டார் சைக்கிளோட்டிகள் சோதனைச்சாவடிகளில் தங்கள் தலைக்கவசத்தை அகற்ற தேவையில்லை என்றார் டாக்டர் ஷம்சுல் அன்வார்.
மேம்படுத்தப்பட்ட டி-ஸோன் கட்டுப்பாட்டு முறை மேலும் துரிதமான கண்காணிப்பு வழிவகுக்கும் என்றார் அவர் அவர்.

