டொரொண்டோ: வெளிநாடுகளின் சொந்த விவகாரங்களில் இந்தியா தொடர்ந்து தலையிடுவதாகக் கனடாவின் புலனாய்வு அமைப்பு, புதன்கிழமை (ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கனடா நடத்திய உலகளாவிய உச்சநிலைக்கூட்டத்தில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா, கனடியப் பிரதமர்கள் உறுதி கூறியதை அடுத்து அந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அல்பர்ட்டாவில் ஜூன் 17 நடைபெற்ற ‘ஜி7’ மாநாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2024ல் அவர்கள் மீட்டுக்கொண்ட உயர் தூதர்களை மீண்டும் தத்தம் பதவிகளில் அமர்த்தவும் ஒப்புக்கொண்டனர்.
‘ஜி7’க்குத் திரு மோடியை திரு கார்னி அழைத்தது குறித்து கனடிய சீக்கிய சமூகத்தில் சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
2023ல் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்பு இருப்பதாகக் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது.
திரு நிஜ்ஜாரின் கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிய இந்திய அரசாங்கம், சீக்கிய பிரிவினைவாதிகளுக்குக் கனடா மறைவிடம் வழங்கியிருப்பதாக அந்நாட்டைக் குற்றம் சாட்டியுள்ளது.
பன்னாட்டு அடக்குமுறை, கனடாவிலுள்ள இந்தியச் செயல்பாடுகளின் மையமாக இருப்பதாக அந்தப் புலனாய்வு அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
இருந்தபோதும், கனடாவுக்கு அதிக மிரட்டலை விடுப்பது சீனாவே என்று அறிக்கை குறிப்பிடுகிறது. ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கனடாவிலுள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு இந்தியத் தரப்பு தொடர்ந்து கொலை மிரட்டல்களை விடுத்துவருவதாகக் கனடிய காவல்துறை கடந்த ஆண்டு அக்டோபரில் தெரிவித்தது.