ஒட்டாவா: அமெரிக்கப் பொருள்களுக்கான கனடாவின் பதிலுக்கு பதில் வரிகள் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 8) அமலுக்கு வந்தன. ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, தனது நாட்டின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியான அமெரிக்கா மீதான பொருளியல் அழுத்தத்தைக் கனடியப் பிரதமர் மார்க் கார்னி அதிகரித்துள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான 18 மாத கால வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்தக் கூடுதல் வரிகள், 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருள்களுக்குப் பொருந்தும். எஃகு, அறைகலன்கள், ஆடைகள், மின்னணுப் பொருள்கள் வரை பல்வேறு பொருள்களுக்கு 15 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையிலான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள இந்தப் பூசலுக்கு, இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இரு வாரங்களுக்கு முன்பு எட்டப்படும் நிலையில் இருந்த உடன்பாட்டைக் கெடுத்ததாக இரு தரப்பும் கூறிக்கொள்கின்றன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாட்டை மேலும் நீட்டிக்க மறுத்ததைத் தொடர்ந்து, அந்த உடன்பாடு ஆண்டறிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பதற்றமான சூழல், இந்த உடன்பாட்டின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட அதிபர் டிரம்பின் வரிகள், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களில் ஐந்து விழுக்காடான 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பகுதிகளைப் பாதித்தன. இதில் மதுபானங்கள், அறைகலன்கள், பால் பொருள்கள், சிமெண்ட், ஆடைகள், மீன்பிடி தூண்டில்கள், ஹாக்கி உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
கனடா மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் கனடாவின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 68 விழுக்காடு அமெரிக்காவுக்கே சென்றுள்ளது. இதில் உடன்பாட்டின்கீழ் அளிக்கப்பட்ட விலக்குகளால் ஏறத்தாழ 80 விழுக்காடு பொருள்கள் வரி இல்லாமல் கொண்டு செல்லப்பட்டன.
இருப்பினும், அமெரிக்கப் பொருளியல் மந்தநிலைக் காலத்துச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள், இந்த விலக்குகளைப் பயன்படுத்த கனடாவை அனுமதிப்பதில்லை.
தன்னைவிட 13 மடங்கு பெரிய பொருளியலைக் கொண்ட ஒரு நாட்டுக்கு எதிராகக் கனடா வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், உடன்பாட்டின் எதிர்காலம் பற்றிய கவலைகள் முதலீடு மற்றும் வளர்ச்சி குறித்த நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளன.


