கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளையரின் மனநலம் குறித்து விசாரணை

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளையரின் மனநலம் குறித்து விசாரணை

படம்: ஏஎஃப்பி

12 Feb 2026 - 8:11 pm

2 mins read

ஒட்டாவா: கனடாவின் டம்ளர் பிரிட்ஜ் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தி பலரைக் கொன்ற 18 வயது இளையரின் மனநலம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னர் காவல்துறையுடனும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுடனும் அவர் நடந்துகொண்ட முறை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவர்.

ஜெஸ்ஸி வேன் ரூட்சேலார் என்ற அந்தத் திருநங்கை, பிப்ரவரி 10ஆம் தேதி முதலில் தம் தாயாரையும் மாற்றான் சகோதரனையும் சுட்டுக்கொன்றார். பின்னர் அவர் அங்கிருந்த உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்து அறுவரைச் சுட்டுக்கொன்றார். நான்கு ஆண்டுகளுக்குமுன் அந்தப் பள்ளியிலிருந்து அவர் இடையிலேயே நின்றதாகக் கூறப்பட்டது.

பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு அவர் மாண்டுபோனார், அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் உள்ள கனடாவில் ஜெஸ்ஸி துப்பாக்கிச்சூடு நடத்தி பலரின் உயிரைப் பறித்ததற்கான காரணம் தெரியவில்லை என்று காவல்துறைத் தளபதி டுவெய்ன் மெக்டோனல்ட் கூறினார்.

ஜெஸ்ஸியிடம் முன்னர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் இருந்தது என்றும் ஆயினும் அது காலாவதியாகிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவை அவரிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

ஜெஸ்ஸி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முதலில் ஒன்பது பேர் மாண்டுபோனதாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அது எட்டாகத் திருத்தி அறிவிக்கப்பட்டது.

ஆயினும், “துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒரு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்,” என்று சம்பவம் நடந்த பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத் தலைவர் டேவிட் எபி குறிப்பிட்டார்.

பள்ளியில் மாண்டோரில் 39 வயது ஆசிரியையும், 12 வயது நிரம்பிய மூன்று சிறுமியரும், 13 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவரும் அடங்குவர்.

தலையிலும் கழுத்திலும் சுடப்பட்ட மாயா கெபாலா எனும் சிறுமி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவரது உறவினரான கிரிஸ்டல் ஹன்ட், பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தார்.

“மற்றக் குழந்தைகளின் உயிரைக் காப்பதற்காக நூலகக் கதவுகளை மூட மாயா முயன்றதாகத் திருவாட்டி ஹன்ட் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
கனடாதுப்பாக்கிச்சூடுஉயர்நிலைப் பள்ளி