கனடா: காலாவதியான வேலை அனுமதி அட்டையுடன் ஒரு மில்லியன் இந்தியர்கள்

கனடா: காலாவதியான வேலை அனுமதி அட்டையுடன் ஒரு மில்லியன் இந்தியர்கள்

2 mins read
5a9229ba-c771-495c-9fd5-5ebd45a730e7
குடிநுழைவுக் கொள்கையைக் கனடா கடுமையாக்கியுள்ளதால் ஏராளமான வெளிநாட்டவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. - படம்: கிராட்ரைட்

ஒட்டாவா: கனடாவில் காலாவதியான அல்லது விரைவில் காலாவதியாகப் போகும் அனுமதி அட்டை வைத்திருப்போரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நூறாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடிநுழைவுத் தகுதியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கனடியக் குடிநுழைவு, அகதிகள், குடிநுழைவுத் துறைத் தகவலின்படி, 2025ஆம் ஆண்டுடன் 1.05 மில்லியன்முதல் 1.49 மில்லியன் வரையிலான தற்காலிகக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் காலாவதியாகிவிட்டன. அவற்றுள் வேலை அனுமதி அட்டைதாரர்களும் அடங்குவர்.

இவ்வாண்டு இறுதிக்குள் 927,000 வேலை அனுமதி அட்டைகளும் காலாவதியாகவுள்ளன.

ஒட்டுமொத்தத்தில், இவ்வாண்டில் 2.1 மில்லியன் பேரின் வேலை அனுமதி அட்டை காலாவதியாகிவிடும் அல்லது விரைவில் காலாவதியாகும் அட்டையை வைத்திருப்பர்.

அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் இந்தியர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

முன்னாள் மாணவர்கள், சரக்குந்து ஓட்டுநர்கள், போக்குவரத்து ஊழியர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோரே பாதிப்பை எதிர்நோக்குவோரில் அதிகம் எனக் கூறப்பட்டது.

வேலை அனுமதி அட்டை நீட்டிப்பு அல்லது நிரந்தரவாசத் தகுதியைப் பெறாவிடில் ஆவணமின்றி, சட்டவிரோதமாகத் தங்கியிருப்போரின் எண்ணிக்கை உயரலாம் என்று கனடியக் குடிநுழைவு வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், 2025-27 காலகட்டத்திற்கான நிரந்தரவாசத் தகுதி வழங்கப்படுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால் கனடாவில் நிரந்தரவாசத் தகுதிபெற கடும்போட்டி நிலவுகிறது.

வரும் 2026-27ஆம் ஆண்டிற்குள், கனடிய மக்கள்தொகையில் தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை ஐந்து விழுக்காடாகக் குறைக்க விரும்புவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, வேலை அனுமதி நீட்டிப்பு அல்லது நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பம் செய்யலாமா, இல்லையேல் தாய்நாட்டிற்கே திரும்பிவிடலாமா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை நாடுவோரின் எண்ணிக்கை பெரிதும் கூடியுள்ளதாகச் சமூக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்