இலங்கையின் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே இருவருக்கும் கனடா பயணத்தடை விதித்துள்ளது. சகோதரர்களான இவ்விருவரும் உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதை முன்னிட்டு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் துடைத்தொழித்த ராணுவ நடவடிக்கையின்போது மகிந்த ராஜபக்சே இலங்கையின் அதிபராகவும் கோத்தபாய ராஜபக்சே நாட்டின் தற்காப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்று இருந்தனர்.
அந்த நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில், இலங்கையின் சிறுபான்மையினரான தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அனைத்துலக கவனிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அதையடுத்து மேலை நாடுகள் பலவும் இலங்கையின் ராணுவ உயரதிகாரிகளுக்குப் பயணத் தடை விதித்தன. இருப்பினும் ராஜபக்சே சகோதரர்கள் மீது இவ்வாறு வலுவான நடவடிக்கை எடுத்துள்ள முதல் நாடு கனடா.
அனைத்துலகச் சட்டத்தை மீறுவோர் அதன் பின்விளைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்வதை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கனடா இவ்வாறு தடை விதித்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார்.
இதன் தொடர்பில் கொழும்பில் உள்ள கனடாவின் தற்காலிகத் தூதருக்கு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியது.
இலங்கை ராணுவத்தின் உயரதிகாரிகளான சுனில் ரத்னநாயக்க, சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி இருவருக்கும் நேற்று கனடா பயணத்தடை விதித்தது.
அத்துடன், கனடியர்கள் இவ்விருவருடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

