நியூயார்க்: கனடாவில் நூற்றுக்கணக்கான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அமெரிக்காவின் வடக்குப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் அடர்ந்த புகையால் சூழப்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கனடாமீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
“தேவையில்லாமல் அமெரிக்காவுக்குள் அசுத்தமான, மாசடைந்த காற்று ஊடுருவுகிறது. கனடா வேண்டுமென்றே அலட்சியமாக உள்ளது,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
“காடுகளையும் புதர்களையும் கனடா சரியாகப் பராமரிக்கவில்லை. கனடாவின் செயலுக்கு விளக்கம் கேட்டு அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னியைத் தொடர்புகொள்ளவுள்ளேன்,” என்று அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நிலவரப்படி கனடாவில் கிட்டத்தட்ட 888 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கட்டுப்பாட்டை மீறி எரிந்து வருகின்றன.
190க்கும் மேற்பட்ட தீச்சம்பவங்கள் ஆன்டேரியோவில் மட்டும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே, கனடாவின் ஆன்டேரியோ மாநில முதல்வர் டக் ஃபோர்டு, அதிபர் டிரம்ப் புகார் கூறுவதை விடுத்து காட்டுத்தீயை அணைக்க அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திரு டிரம்ப்பின் கருத்துகளுக்கு கனடாவின் அவசரகால மேலாண்மை அமைச்சு பதிலளித்துள்ளது.
“காட்டுத்தீ தொடர்பாக இரு நாடுகளும் தொடர்பில் இருந்து வருகின்றன. இதுபோன்ற பேரிடர்களில் கனடாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டுள்ளன,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
காட்டுத்தீயைத் தடுக்க கனடா பாடுபட்டு வருவதாகவும், காடுகளின் நிலைத்தன்மை, தீத்தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் கிட்டத்தட்ட 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
தரவுகள்படி கனடாவில் ஏற்கெனவே ஏறத்தாழ மூன்று மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் அழிந்துவிட்டன.

