ஆஸ்திரேலியா சென்றடைந்தார் கனடியப் பிரதமர்

ஆஸ்திரேலியா சென்றடைந்தார் கனடியப் பிரதமர்

2 mins read
e233aab0-9be0-4041-b503-39d27775b067
கனடியப் பிரதமர் மார்க் கார்னியும் அவரது துணைவியார் டயானா ஃபாக்ஸ் கார்னியும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ‘சிட்னி கிங்ஸ்ஃபர்ட் ஸ்மித்’ விமான நிலையத்தை செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) சென்றடைந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: கனடியப் பிரதமர் மார்க் கார்னி செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

உலகச் சூழலில் ‘சிதைவு’ ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கனடாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணத்தை மேற்கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கில் சண்டை அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவுக்கு நெருக்கமான அந்த இரு நாடுகளின் தலைவர்களும் சந்திக்கின்றனர்.

ஜப்பான், இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் வட்டார நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுவரும் திரு கார்னி, அண்மையில் புதுடெல்லியுடன் வர்த்தக உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார்.

சீக்கியப் பிரிவினைவாதத்தின் தொடர்பில் ஓராண்டு நீடித்த விரிசலைத் தொடர்ந்து, இந்தியாவுடனான உறவை மீண்டும் சரிசெய்யும் நோக்கில் அவர் அங்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், கனடாவும் ஆஸ்திரேலியாவும் தற்காப்பு, கடல்துறைப் பாதுகாப்பு, அரிய கனிமங்கள், வர்த்தக, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு கார்னியின் அலுவலகம் கூறியுள்ளது.

திரு கார்னி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் பிரதமர் ஆண்டனி அல்பனிசைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள தனது ராணுவத் தலைமையகம் தாக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதியில் ஈரான் ஆளில்லா வானூர்தித் தாக்குதலை மேற்கொண்டது. இருப்பினும், அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில், துபாய்க்கு 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘அல் மின்ஹாட்’ ஆகாயத் தளம் கடந்த வார இறுதியில் தாக்கப்பட்டதைத் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் உறுதிசெய்தார்.

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மார்ச் 1ஆம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு வட்டாரத்தில் பூசல்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்