ஒட்டாவா: ஒன்பது ஆண்டுகளாக கனடியப் பிரதமராகப் பதவி வகித்து வந்துள்ள திரு ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவின் ஆளும் முற்போக்குக் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக திங்கட்கிழமை (ஜனவரி 6) அறிவித்தார். ஆனால், அடுத்த தலைவரைக் கட்சி தேர்வுசெய்யும் வரை தாம் அப்பதவியில் தொடர்வதாக அவர் கூறினார்.
அடுத்த தேர்தலில் முற்போக்குக் கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறும் வேளையில், பதவி விலகக் கோரி கட்சியினரிடமிருந்து திரு ட்ரூடோ கடும் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டங்கள் நிறுத்திவைக்கப்படும் என செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார். அதன்படி, ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்கும்போது திரு ட்ரூடோ பிரதமராக தொடர்வார்.
“திடமான, தேசிய அளவில் போட்டித்தன்மைமிக்க செயல்முறை மூலம் கட்சி அதன் அடுத்த தலைவரைத் தேர்வுசெய்த பிறகு கட்சித் தலைவர், பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள நான் எண்ணம் கொண்டுள்ளேன்,” என்றார் திரு ட்ரூடோ.
“அடுத்த தேர்தலில் உண்மையான தேர்வைப் பெற இந்த நாட்டிற்குத் தகுதியுள்ளது. நான் உட்கட்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தால், அந்தத் தேர்தலில் நான் ஆகச் சிறந்த தேர்வாக இருக்க முடியாது என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் விவரித்தார்.
2015 நவம்பரில் பிரதமராகப் பதவியேற்ற திரு ட்ரூடோ, 53, இருமுறை தேர்தல்களில் வென்றதன் மூலம் கனடாவில் ஆக நீண்டகாலம் பிரதமர் பதவியில் இருந்தவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
ஆனால், விலைவாசி உயர்வு, வீட்டுப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஈராண்டுகளுக்கு முன்பு சரியத் தொடங்கிய அவரது செல்வாக்கு, இதுவரை மீளவே இல்லை.
அக்டோபர் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய தேர்தலில், கட்சித் தலைவர் எவராக இருந்தாலும் எதிர்க்கட்சியான பழைமைவாதக் கட்சியிடம் முற்போக்குக் கட்சி படுதோல்வி அடையும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
‘உறுதியான நண்பர்’: அமெரிக்கா புகழாரம்
இதற்கிடையே, வரும் மாதங்களில் பதவி விலக உள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்ததை அடுத்து, அமெரிக்காவுக்கு ‘உறுதியான நண்பராக’ அவர் இருந்து வந்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை ஜனவரி 6ஆம் தேதி தெரிவித்தது.
“கனடிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்ற பத்தாண்டு காலத்தில் அமெரிக்காவுக்கு உறுதியான நண்பராக பிரதமர் ட்ரூடோ இருந்துள்ளார். பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் நாங்கள் அணுக்கமாக இணைந்து செயல்பட்டுள்ளோம்,” என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கேரின் ஜீன் பியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோருடன் நல்லுறவைத் தக்கவைத்துக்கொண்ட திரு ட்ரூடோ, அடுத்த அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாகப் பதவி ஏற்கவுள்ள டோனல்ட் டிரம்ப்புடன் கொண்டிருந்த உறவில் அவ்வப்போது நெருக்குதலைச் சந்தித்திருக்கிறார். திரு ட்ரூடோவை விமர்சித்துள்ள டிரம்ப், கனடாவுக்கு எதிராக வரி விதிப்பது குறித்து மிரட்டலும் விடுத்துள்ளார்.

