ஒட்டாவா: கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகும் அறிவிப்பு வெளிவரலாம் என இதுகுறித்து தகவலறிந்த தரப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) தெரிவித்தது.
ஒன்பது ஆண்டுகளாக பதவியில் இருந்த பிறகு கனடாவின் ஆளும் முற்போக்குக் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து தாம் விலகப் போவதாக திரு ட்ரூடோ திங்கட்கிழமை (ஜனவரி 6) வாக்கில் அறிவிக்கலாம் என குளோப், மெயில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தத் தகவலறிந்த வட்டாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
அக்டோபர் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய தேர்தலில் எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சியிடம் முற்போக்குக் கட்சி படுதோல்வி அடையும் எனக் கருத்தாய்வுகள் கூறும் வேளையில், திரு ட்ரூடோவின் பதவி விலகலால் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் இல்லாமல் போகும்.
பதவி விலகல் குறித்து திரு ட்ரூடோ எப்போது அறிவிப்பார் என்பது பற்றி தங்ககளுக்கு உறுதியாகத் தெரியாது எனத் தகவலறிந்த தரப்பினர் குளோப், மெயில் ஊடகங்களிடம் கூறினர். ஆனால், புதன்கிழமை (ஜனவரி 8) நடைபெறும் முற்போக்குக் கட்சியினரின் அவசரக் கூட்டத்துக்கு முன்னர் பதவி விலகல் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அத்தரப்பினர் தெரிவித்தனர்.
திரு ட்ரூடோ உடனடியாக பதவியிலிருந்து விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராகத் தொடர்வாரா என்பது பற்றித் தெரியவில்லை என குளோப், மெயில் ஊடகங்கள் கூறின.

