வாஷிங்டன்: கனடிய வாகனங்கள் மீதான வரிகளை அடுத்த ஆண்டிலிருந்து இரட்டிப்பாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வணிகப் போர் தீவிரமடைந்துவரும் சூழலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கனடாவின் குறிப்பிட்ட சில பொருள்கள்மீது அமெரிக்கா விதிக்கவிருந்த புதிய 50 விழுக்காட்டுத் தீர்வையைத் தவிர்க்க, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்தே திரு டிரம்ப்பின் புதிய எச்சரிக்கை வெளிவந்துள்ளது. அந்தத் தீர்வைகள் சனிக்கிழமை நடப்புக்கு வந்தன.
“2027 ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்துச் சிறிய, பெரிய கார்கள், கனரக வாகனங்கள், உதிரிபாகங்கள், எஃகு மீதான வரிகள் 50 விழுக்காடாக உயர்த்தப்படும்,” என்று திரு டிரம்ப், ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கனடிய வாகனங்கள்மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத பாகங்களுக்கு 25 விழுக்காடாக உள்ளது. அதே நேரம் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் எஃகுமீது பொதுவாக 50 விழுக்காட்டு வரி விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை ‘மோசமான ஒப்பந்தம்’ என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டார். பேச்சிலிருந்து வெளியேறிய அவர், அமெரிக்காவுக்கு எதிராகப் பதிலடி வரிகளை அறிவித்தார். அமெரிக்கா மீதான புதிய வரிகள் செப்டம்பர் 8ஆம் தேதி நடப்பிற்கு வரும் என்றார் அவர்.
அந்த வரிகள் அமெரிக்க எஃகு, பால் பொருள்களை இலக்காகக் கொண்டுள்ளன. அவற்றோடு, வேளாண் கருவிகள், மரக்கூழ், காகிதம், மின்னணுவியல் போன்ற துறைகளிலும் புதிய வரிகள் விதிக்கப்படும் என்று கனடா கூறியுள்ளது.
அமெரிக்காவே கனடாவின் மிகப்பெரிய வணிகப் பங்காளி. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் 70 விழுக்காடு அமெரிக்காவிற்குச் செல்கிறது.
அரசாங்கத் தரவுகளின்படி, இந்த ஆண்டில் மெக்சிகோவிற்கு அடுத்த நிலையில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய சரக்கு வணிகப் பங்காளியாகக் கனடா திகழ்கிறது.


