பல்லின் மூலம் பார்வையை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை

பத்தாண்டுகளுக்குப் பிறகு பார்வை பெற்ற கனடியப் பெண்

2 mins read
86f2a541-43af-49a7-969f-14c0ed36a303
கனடாவில் மூவர் மட்டுமே இந்த சிகிச்சையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இணையம்

ஒட்டாவா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சேர்ந்தவர் 75 வயது திருவாட்டி கெயில் லேன்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குமுன் பார்வையைப் பறிகொடுத்த அவரது வாழ்விற்கு மீண்டும் ஒளியூட்டிள்ளது அரியதோர் அறுவை சிகிச்சைமுறை.

‘நியூயார்க் போஸ்ட்’ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

‘ஆஸ்டியோஓடான்டோகெரடோப்ராஸ்தெசிஸ்’ (Osteoodontokeratoprosthesis) என எளிதில் உச்சரிக்க இயலாத பெயரைக் கொண்டுள்ள இந்த சிகிச்சையைப் பொதுவாக ஆங்கிலத்தில் ‘டூத்-இன் -ஐ சர்ஜரி’ என்று குறிப்பிடுகிறார்கள்.

உண்மையாகவே நோயாளியின் பல்லைப் பயன்படுத்தித்தான் அவரது பார்வையை மீட்டெடுக்கிறார் மருத்துவர்.

திருவாட்டி லேனுக்கு வான்கூவர் நகரில் உள்ள மவுண்ட் செயின்ட் ஜோசஃப் மருத்துவமனையில் இந்த அரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் மருத்துவர் கிரெக் மொலோனி.

கனடாவிற்கு இந்த சிகிச்சைமுறையை அறிமுகப்படுத்திய டாக்டர் கிரெக் மொலோனி, இது சிக்கலான, அரிய சிகிச்சை முறை என்றாலும் வேறு வாய்ப்பு இல்லாதவர்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது என்று கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சை முடிவடைந்த சில நாள்களில் திருவாட்டி லேனின் பார்வைத்திறன் சிறிது சிறிதாக மேம்படத் தொடங்கியது. இப்போது வண்ணங்களையும் மனித முகங்களையும் அவரால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிகிச்சைமுறை:

மருத்துவர், முதலில் நோயாளியின் பல் ஒன்றை அகற்றி, அவரது கன்னத்தில் சில மாதங்களுக்கு அதைப் பொருத்துவார்.

அந்தப் பல்லைச் சுற்றி திசுக்கள் வளரத் தொடங்கும். பின்னர் அந்தப் பல்லையும் சுற்றியுள்ள திசுக்களையும் அகற்றுவார்.

பல்லில் சிறு துளையிட்டு, செயற்கை விழித்திரை, சிறிய தொலைநோக்கி ஆகியவற்றைப் பொருத்துவார்.

பின்னர் அவை அனைத்தையும் அறுவை சிகிச்சை மூலம் நோயாளியின் கண்குழியில் பொருத்துவார். பழைய சேதமுற்ற விழித்திரை அகற்றப்படும்.

குணமடையும்போது பொதுவாக வலி இருக்காது என்றார் டாக்டர் மொலோனி.

நோயாளியின் சொந்தத் திசுக்களையே பயன்படுத்துவதால் அவரது உடல் அவற்றை நிராகரிக்காது என்று எடுத்துக்கூறினார் அவர்.

குறிப்புச் சொற்கள்